கன்னியாகுமரி பகவதி அம்மனின் நவராத்திரி பரிவேட்டை..!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் 24-வது வருஷமாக விஜயதசமி மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா கடந்த 21-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டை தான். 10-ந் திருவிழா அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்குப் பின் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் அம்மன் எலுமிச்சைபழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி குதிரை வாகனத்தில், பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டார்.

அம்மன் எழுந்தருளிய வாகனம் கோவிலில் இருந்து வெளியே வந்ததும், வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கையில் வாள் ஏந்தியபடியும், வில் அம்பு ஏந்தியபடியும் நடந்துச் சென்றனர். ஊர்வலத்திற்கு முன்பு பஜனைக் குழுவினர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பஜனை பாடி சென்றனர். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கம் சார்பில், நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்த படியும், பகவதி அம்மன் உருவபடத்தை தாங்கியபடியும் அணிவகுத்துச் சென்றனர். பஜனை போன்ற நிகழ்ச்சிகளால் கன்னியாகுமரி சாலை திருவிழாக் கோலம் பூண்டது.

அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளிச் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணக் கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் கட்டி அம்மனை சிறப்பாக வரவேற்றனர். கோயிலில் இருந்து புறப்பட்ட பரிவேட்டை ஊர்வலம் மாலை 6 மணியளவில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு கோவில் மேல் சாந்தி போற்றிகள் பூஜை நடத்தினர். அதன்பின்னர் அம்பு பாய்ந்த இளநீருடன் பக்தர் ஒருவர் அம்மன் வாகனத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது. 

பின்னர் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்திலிருந்து வெள்ளி பல்லக்கு வாகனத்தில் கோயில் நோக்கிப் புறப்பட்டார். அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு செய்யப்பட்டது. அதன்பின் ஆடி அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளான பரிவேட்டை திருவிழா மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகிய முக்கியமான ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் கிழக்குவாசல்  திறக்கப்பட்டது. அதுவும் 1 மணி நேரம் மட்டுமே இந்த கிழக்கு வாசல் திறக்கப்பட்டு இருக்கும் மற்ற நாட்கள் முழுவதும் இந்த கிழக்கு வாசல் மூடியே இருக்கும். கோவில் கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் எழுந்தருளினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!