கிராமசபைக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை முறியடிக்க இப்படி ஒரு முயற்சியா?

கிராமசபை

காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ம் தேதி ஒவ்வொரு பஞ்சாயத்து சார்பாகவும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் பங்கேற்கும் அந்தந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் அரசு சார்பில் செயல்படுத்தும் திட்டங்களுக்கான ஆதரவு, எதிர்ப்புகளை கூட்டத்தின் மினிட் புத்தகத்தில் பதிவு செய்வார்கள். அந்தப் புத்தகம் பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்ப ப்படும். மக்களின் மன நிலையை தெரிந்து கொண்டு அரசாங்கம் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தமுறை கிராம சபைக் கூட்டங்களில் மினிட் புத்தகத்தில் மக்களின் எதிர்ப்புகள் பதிவாகி விடக் கூடாது என்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது.

இது பற்றி,  ‘உள்ளாட்சி உங்களாட்சி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தா சிவகுமாரிடம் கேட்டோம். “கிராமசபை நிர்வாகத்தை ‘ஸ்பெஷல் ஆபீசர்’ பொறுப்பில் இருக்கிறவர்கள், இப்போதும் கவனித்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமே போதுமானது என்ற முடிவுக்கு வரமுடியாது. ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நாட்டில் மொத்தமுள்ள 12,524 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. வருகிற அக்டோபர் 2-ம் தேதியும் (நாளை) அப்படியொரு கூட்டம் நடக்கவுள்ளது.
கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இதன் உறுப்பினர்களே. இப்படி, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கிராமசபை பஞ்சாயத்தில் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் நடக்கவுள்ளதை ஏழு நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம், வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தகவல் போகும். அவர் மூலமாக அது, கிராம மக்களுக்குப்போகும். ஒவ்வொரு மூன்று மாத வரவு செலவு கணக்கு, முறைப்படி தணிக்கை செய்யப்பட்ட கணக்கு ஒப்படைப்பு என்று ஏறக்குறைய சட்டமன்ற, நாடாளுமன்ற செயல்பாடு போலவே அது இருக்கும்.

ரேசன் கடை, நூறுநாள் வேலைத்திட்டம் போன்ற கணக்கு வழக்குகளுடன், நீர்நிலைகள் பராமரிப்பு போன்ற கிராம மேம்பாட்டு விஷயங்களும் இங்கே விவாதிக்கப்பட்டு, பின்னர் ஆதரவு, எதிர்ப்பு என்று கிராம உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு அந்தக் கோப்பு அனுப்பி வைக்கப்படும். டாஸ்மாக் மதுக்கடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கிராமத்துக்கு வேண்டுமா, வேண்டாமா போன்றவையும் இப்படி மக்கள் கூடிப் பேசித்தான் தீர்மான வடிவத்துக்கு வரும். ஆனால் அக்டோபர் 2-ம் தேதி நடக்கவுள்ள கூட்டம் வழக்கமான முந்தைய கூட்டம் போல இருக்காது. அதற்குக் காரணம் இருக்கிறது.

கிராம சபைக் கூட்டம் கூடி ஆய்வு முடிந்ததும், வட்டார வளர்ச்சி அலுவலர்  அலுவலகத்தில் உள்ள ‘மினிட்’ புத்தகத்தில் ஒவ்வொரு திட்டத்துக்கும் கிடைத்த  ஆதரவு - எதிர்ப்புகள் மக்களின் கையெழுத்துடன் பதிவில் ஏறிவிடும். அந்தந்த கிராமத்துக்கு அதன் நகல் ஒன்றை அப்போது கொடுப்பார்கள். இப்போது கிராம மக்களின் பார்வைக்கே அந்த மினிட் புத்தகம் வராதபடி அதிகாரிகள் செயல்படத் தொடங்கிவிட்டனர். இது, மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும். எந்தத் திட்டத்தையும் மக்களுக்கு எதிராக இதன் மூலம் அரங்கேற்றலாம். நிதிவிவகாரங்களில் மோசடி செய்யலாம். அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு இன்னும் நிறைய கெடுதல் செய்யலாம். மீத்தேன், டாஸ்மாக் போன்று மக்களுக்கு எதிரான பல விவகாரங்கள் சத்தமில்லாமல் அங்கே சட்டமாகப் பெரிய வாய்ப்பு இதனால் உண்டாகிவிடும். உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்த தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதன் பின்னணியில் இப்படிப் பல பின்னணிகள் இருக்கின்றன.

அக்டோபர் 2-ம் தேதி நடக்கும் கிராமசபைக் கூட்ட முடிவில் ‘மினிட்’ புத்தகத்தில், தாங்கள் கையெழுத்துப் போட்ட பிரதியை ஜெராக்ஸ் எடுத்துத் தரும்படி மக்கள் கேட்கப் போகிறார்கள். நிச்சயமாக அதிகாரிகள் தர மறுப்பார்கள், மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் விழித்துக்கொள்ள இவர்களே வாய்ப்பு கொடுத்துள்ளனர், இது நல்லவிஷயம்தான். ‘மினிட்’ புத்தகம் குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை நாங்கள் கிராமம், கிராமமாகப் போய் செய்யத் தொடங்கியிருக்கிறோம்.  ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணையாக மக்களுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் சிக்கப்போகிறார்கள். மக்களைக் காப்பாற்ற எங்களோடு ஊடகங்களும் துணை நின்றால், மக்கள் உரிமையை மீட்டெடுக்கலாம்.

சொல்லப்போனால், உலகவங்கி நிதி முதற்கொண்டு அனைத்தும் நாட்டுக்குக் கடனாகக் கிடைப்பது கிராமங்களை முன்னிறுத்திதான். அந்த நிதியைக் கொண்டுதான் சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எளிதாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றன. கிராமங்கள் இல்லையென்றால் அரசுகளும் இல்லை” என்கிறார், நந்தாசிவகுமார்.

அக்டோபர், 2016-ன் தொடக்கத்திலேயே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தி, கிராமசபை நிர்வாகங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும். அப்படி நடக்காததால், தேர்தலை நடத்தக்கோரி, பலரும் கோர்ட்டுக்குப் போனார்கள்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கை, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் முதன்மை அமர்வு  விசாரித்தது. ‘உள்ளாட்சித் தேர்தலை, நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை, செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ என்று, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவும் போட்டது.

தேர்தல் கமிஷனோ, அதேநாளில் (செப்டம்பர், 18-ம் தேதி) கோர்ட்டில் ஆஜராகி, ‘1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட வார்டு வரையறைபடிதான் தேர்தல் நடத்த வேண்டுமா என்பதில் ஆணையத்துக்கு குழப்பம் உள்ளது. வார்டு வரையறை தொடர்பாக ஐகோர்ட்டின் விளக்கம் தேவைப்படுகிறது’ என்றது. உள்ளாட்சி அதிகாரப் பகிரல் விவகாரம், இதே இடத்தில் அப்படியே நொண்டியடித்தபடி நிற்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயிர் வந்தால்தான் உண்மையாகவே ஜனநாயகம் இருக்கிறது என்று அர்த்தம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!