மதுரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ‘திருநகர் பக்கம்’ இளைஞர் பட்டாளம்! | Madurai 'Thirunagar pakkam' team started environment activities

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/10/2017)

கடைசி தொடர்பு:17:51 (01/10/2017)

மதுரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ‘திருநகர் பக்கம்’ இளைஞர் பட்டாளம்!

மதுரையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பணியில் இறங்கியுள்ளது ’திருநகர் பக்கம்’ குழு. இக்குழுவை உருவாக்கி வழிநடத்துபவர் எம்.பி.ஏ பட்டதாரி விஷ்வா.  மதுரையின் விளாச்சேரி கண்மாயை சுற்றி மரங்கள் நட்டு கொண்டிருந்த விஷ்வாவை சந்தித்து பேசினோம்.

திருநகர் பக்கம்

”சமூக பணிகளை யாராவது வந்து செய்வார்கள் என்று நினைக்காமல் நாமே செய்யலாமே என்று நினைத்தேன். நான் MBA படித்தவன். கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். இப்போது ஒரு கம்பெனியில் போதுமான சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன்.  எங்களுடைய அணியில் 5 வயதிலிருந்து 70 வயது வரையிலான சமூக ஆர்வலர்கள் உள்ளனர். ’திருநகர் பக்கம்’ என்ற பெயரை வைப்பதற்கான காரணம், மதுரை முழுவதிலும் எங்கள் குழு சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொள்வது கடினம்.  அதனால் குறிப்பிட்ட சிறிய திருநகர் என்ற இடத்தை தேர்வு செய்தோம். இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாணவர்கள் தாமாகவே முன் வந்து எங்களுடன் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

திருநகர் பக்கம்

நாங்கள், சேமட்டான் கண்மாயை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி கொண்டிருக்கும் போது, மக்கள் தாமாகவே முன் வந்து பணஉதவி செய்து, பொக்லைன் வாகனத்தையும் உதவிக்கு கொடுத்து 20 நாள்களில் செய்ய வேண்டிய வேலையை 8 நாட்களில் செய்து முடிக்க உதவினர். 

விதைப் பந்துகள் எனப்படும் உருண்டை வடிவ விதைகளை நேரடியாக புதைத்தால் சீக்கிரமாக வளரும் தன்மை கொண்டது. இலுப்பை, கானகம் போன்ற உயரமாக வளரும் மரங்களையும் ஆமணக்கு போன்ற புதர் செடிகளையும் விதைத்து வளர்க்க முயற்சித்து வருகிறோம்.

புதர் செடிகள் வன விலங்குகளுக்கு அதிகம் பாதுகாப்பு தருகிறது. ’ஊர்வனம்’ என்ற எங்களின் மற்றொரு அமைப்பு வனவிலங்குகள் பற்றி நகர மக்களுக்கும் , மாணவர்களுக்கும், மலை வாழ் மக்களுக்கும் விழிப்புண்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. "பாம்பு கடி என்பது ஒரு விபத்து ,விதி அல்ல " என்ற ஒரு வாசகத்துடன் மக்களுக்கு பாம்பு கடி பற்றிய விழிப்புணர்வை பள்ளியிலும் கல்லூரிகளிலும், ஏற்படுத்தி வருகிறோம். பாம்பு கடியால் அதிகம் இறப்பது பயத்தினால் மட்டுமே.  இந்தியாவில் ஆண்டுக்கு 50000 பேர் இறக்கின்றனர். இதில் 45000 பேர் மலை வாழ் மக்கள் இதற்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததும் ஒரு காரணம். 220 வகையான பாம்புகளில் 4,5 வகை மட்டுமே அதிகம் விஷம் வாய்ந்தவை.

திருநகர் பக்கம்

நீர் நிலங்களை பாதுகாப்பது, மேலும் வைகை ஆற்றில்கழிவு நீர் கலப்பதை நிறுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற செயல்களிலும் கவனம் செலுத்த உள்ளோம். இந்த பணியால் எங்களுக்கு வரும் ஒரே லாபம் மனநிம்மதி. எங்களுடைய செயல்கள் வருங்கால இளைஞர்களுக்கு  ஒரு முன்னோடியாகஇருக்கும் என்பது இன்னொரு லாபம்” என்றார்.