34 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன லட்சுமணர் சிலை குறித்த விசாரணை தொடக்கம்!

34 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காணாமல் போன லட்சுமணர் சிலை குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

லெட்சுமணர் சிலை மாயம் குறித்து விசாரணை நடத்திய ஐ.ஜி


உயர் நீதிமன்ற உத்தரவினை  தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யாக பணியாற்றி வரும் பொன்மாணிக்கவேல் இன்று ராமேஸ்வரம் கோயிலில், கோயில் அலுலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தற்போது கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் சிலைகள் குறித்தும் அவற்றின் பாதுகாப்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். மேலும் கடந்த 1983-ம் ஆண்டு இக்கோயிலில் இருந்து காணாமல் போன பல கோடி மதிப்புடைய லட்சுமணர் சிலை குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ''தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற சுமார் 350 கோடி மதிப்புள்ள சிலைகளை இதுவரை மீட்டுள்ளோம். மேலும் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 150 கோடி மதிப்புள்ள பழமை வாய்ந்த சிலைகளை அங்கிருந்து மீட்டு வந்துள்ளோம். தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடந்த சிலைகள் திருட்டு குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் கோயிலிலும் இன்று ஆலய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் போது கடந்த 83-ம் ஆண்டில் இக் கோயிலில் இருந்து காணாமல் போன லட்சுமனர்  சிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் விசாரணை துவக்கப்பட உள்ளது'' என்றார்.


 இந்த ஆலோசனை கூட்டத்தில் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, சிவகங்கை இணை ஆணையர் செந்தில்நாதன் மற்றும் கோயில் அலுவலர்கள் சிலர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!