’கதர் துணிகளை பயன்படுத்துங்கள்!’ - தமிழக மக்களிடம் முதல்வர் வைக்கும் கோரிக்கை | Edappadi palanisamy request people to use khadi dress

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (01/10/2017)

கடைசி தொடர்பு:17:37 (01/10/2017)

’கதர் துணிகளை பயன்படுத்துங்கள்!’ - தமிழக மக்களிடம் முதல்வர் வைக்கும் கோரிக்கை

தமிழக மக்கள் அனைவரும் கதர் துணிகளை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  இந்தியர்களாகிய நாம் அனைவரும் கதர் ஆடைகளை அணிந்திட வேண்டும் என்ற அண்ணல் காந்தியடிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவித்திட தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.


கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நெசவு செய்யப்படும் கதராடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராமப்புறக் கைவினைஞர்கள், அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை தமிழகத்திலுள்ள 90 கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு உதவி வருகிறது.


கதர் ஆடைகளை நெசவு செய்யும் கிராமப்புற கதர் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் நோக்கில், காதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நலவாரியத்தின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் அவ்வாரியத்தைச் சேர்ந்த 1134
உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான நிதியுதவி, விபத்து காப்பீட்டு நிதியுதவி, இயற்கை மரணம் அடைந்த பயனாளி குடும்பத்திற்கான நிதியுதவி, திருமண நிதியுதவி, மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி, கிராமிய நூற்பு மையத்தில் பணிபுரியும் நூற்பாளர்களுக்கு கழிப்பறை வசதி, ராட்டைகள் மற்றும் தறி
உபகரணங்களை பழுதுநீக்கம் செய்திட நிதியுதவி என மொத்தம் 54 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதய சங்கங்களுக்கும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தள்ளுபடி மானியமான 17 கோடி ரூபாயை இந்த ஆண்டு முதல் 34 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வாழ்வு சிறக்க, தமிழக மக்கள் அனைவரும் கதர் துணிகளை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென, அண்ணல் காந்தியடிகள் பிறந்த இந்த நன்னாளில் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க