Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நுழைய காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதுக்கான காரணம்! #GandhiJayanthi

 

இன்றைய கன்னியாகுமரி மாவட்டமான அன்றைய தென்திருவிதாங்கூர் பகுதிக்கு மகாத்மா காந்தி வந்தது அப்பகுதி மக்களுக்கு 
பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. கோகலேவைச் சந்தித்த காந்தியை, "இந்தியா முழுவதும் பயணம் செய்' என்று சொல்லி இருக்கிறார் கோகலே. ஆனால் 1925-ம் ஆண்டு வாக்கில்தான் காந்தியால் தென்னிந்திய பகுதிகளுக்கு வர முடிந்தது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 10 ஆண்டுகளில் காந்தியிடம் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களோடு தான் தென் திருவிதாங்கூர் நாஞ்சில் நாட்டுக்கு வந்தார். காந்தி, பிரிட்டிஷ் இந்தியா பகுதிகளிலேயே  தனது பிரசாரத்தை வைத்துக் கொண்டிந்தாலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி வரவேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்திருக்கிறது. அந்த ஆசையை அவரே கூறியிருக்கிறார். அவரது ஆசை அவரை நான்கு முறை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்துவிட்டன. முதன்முறையாக நாஞ்சில் நாட்டுக்கு வந்த போது மக்கள் அவரை தெய்மாக தான் பார்த்தனர். அவரது படத்தை வாகனங்களில் வைத்து வீதிக்கு வீதி கொண்டு சென்றனர். நாஞ்சில் நாட்டில் நடந்ததை காந்தியே 'யங் இந்தியா' இதழில் 1931-ம் ஆண்டு 'ஆட்சேப கரமான வழிபாடு' என்கிற கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

முதல் தடவையாக 1925-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி சனிக்கிழமை தென் திருவிதாங்கூர் பகுதிக்கு காந்தி வந்தார். வைக்கம் போராட்ட களத்துக்கு சென்று விட்டு திருவனந்தபுரம் வழியாக  கன்னியாகுமரிக்கு மதியம் வந்து சேர்ந்தார். அங்கு பிரிட்டிஷ் ரெசிடென்சியல் விடுதியில் ஓய்வெடுத்தார். இந்த முறை அவர் திருவிதாங்கூர் சமஸ்தான விருந்தினராக வந்திருந்ததால் சமஸ்தான அதிகாரிகள் அவருக்கு வேண்டியவற்றை செய்து ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

அன்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வெளி பிரகாரத்தை மட்டும் சுற்றி வந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை பொறுத்தவரை கடல் கடந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களை கோயில்களில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. எனவே காந்திக்கு கோயிலில் நுழைய அனுமதி கொடுக்கப்படவில்லை. அதன் பின் சூரியன் மறையும் வேளையில் கன்னியாகுமரி தீர்த்தக்கட்டத்தில் தன்னை மறந்து நீராடினார். காந்தி குழந்தை போல வாயில் கடல் நீரை உறிஞ்சி கொப்பளிக்கும் காட்சியும் புகைப்படமாக இருக்கிறது.

நவஜீவனில் கன்னியாகுமரியில்  நீராடிய காட்சியை காந்தி 'கன்னியாகுமரியில் தரிசனம்' என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார். அன்று இரவு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்தி பேசினார். அப்போது டாக்டர் நாயுடுவின் முயற்சியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகர்கோவில், சுசீந்திரம் ஆகிய இரு ஊர்களில் உள்ள மக்களின் சார்பாக காந்திக்கு பணமுடிப்பு கொடுக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து காந்தி, திருவனந்தபுரம் சென்றார். கன்னியாகுமரியின் அடையாளம் பகவதி அம்மன் கோயில்தான். ஆனால், அங்கு காந்தியை அன்று அனுமதிக்கவில்லை. பின்னாளில்  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் அருகில் தான்  அனைவரும் சென்றும் பார்வையிடும் இடமாக காந்தி நினைவு மண்டபம் கட்டப்படுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement