மகன் திருமணத்துக்கு ‘தமிழ்நாட்டின் சம்பந்தி’ காந்தி விதித்த நிபந்தனை!

காந்தி

ந்திய சுதந்திரப்போர் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த கடந்த நுாற்றாண்டின் ஆரம்பத்தில் அதன் திசை கொஞ்சம் புலப்படாமல் இருந்தது. காங்கிரஸில் காந்தியின் வருகைக்குப்பின் இந்திய சுதந்திரப்போரில் காங்கிரஸின் கீழ் மக்கள் ஒன்றிணைந்த அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை அல்லாத சுதந்திர வெறி மக்களிடம் கனன்று எரிய ஆரம்பித்தது. தன் அஹிம்சை கொள்கையால் காந்தி மக்கள் மனதில் மாபெரும் தலைவராக உயர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கைக்கொண்ட அஹிம்சை போராட்ட யுக்திதான் முதன்முறையாக காந்தியை இந்திய மக்களிடையே ஆச்சர்யமாக பார்க்கவைத்தது. அதன் எதிரொலியாக காந்தி இந்தியாவுக்கான சுதந்திர வெளிச்சத்தை பெற்றுத்தருவார் என அவர்கள் நம்பினர்.

காந்தியின் தென் ஆப்பிரிக்க வெற்றியினால் இந்தியாவில் பல மெத்தப் படித்தவர்களும் தங்கள் மேல்தட்டு உத்தியோகங்களை துறந்து சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்றனர். குறிப்பாக வழக்கறிஞர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியார். இந்திய அரசியலில் சாணக்கியன் என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி காந்தியின் சாகசங்களைக் கண்டு சேலத்தில், தான் வெற்றிகரமாக நடத்திவந்த வழக்கறிஞர் தொழிலை கைவிட்டவர். பள்ளி, கல்லுாரி நாள்களில் கோகலே, திலகர், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பின்னாளில் காந்தியின் அஹிம்சை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரையே தன் குருவாக ஏற்றவர். “என் மனசாட்சியின் காவலர்” என காந்தியால் சிலாகிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

அரசியல் சாணக்கியன், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், பரந்துபட்ட சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரி என்றெல்லாம் நாம் அறிந்த ராஜாஜிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஆம் அவர் தேசத் தந்தை காந்திக்கு சம்பந்தி. ஆம் காந்தி நம் தமிழகத்தின் சம்பந்தி என்பது இன்றைய தலைமுறை அறியாத சேதி; ஆச்சர்யமான சேதி... காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து மணந்தவர்!

காந்திஇந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டு சீற்றமான போராட்டங்களையும் அதற்குப் பரிசாக சிறைவாசமும் அனுபவித்துவந்த இந்த இருபெரும் தலைவர்களின் பிள்ளைகளுக்கு இடையே காதல் கணிந்தது எப்படி... கல்யாணம் கைக்கூடியது எப்படி
அது 20 களின் மத்தியில் நடந்த சம்பவம்...

சேலத்தில் பிரபல வழக்கறிஞரிடம் இளம் வழக்கறிஞராக பணியாற்றி பின்னர் குற்றவியல் வழக்கறிஞராக பிரலமடைந்திருந்தார் ராஜாஜி. தென் ஆப்பிரிக்க சம்பவத்துக்குப்பிறகு காந்தி என்ற ஆளுமை மீது அவருக்கு காதல் உருவானது. இதனால் தொழிலில் கொஞ்சம் கவனம் குறைய ஆரம்பித்திருந்தது. இந்திய சுதந்திரம் குறித்தும் காந்தி குறித்தும் எந்நேரமும் பேசிவந்தார். இது அவரது தந்தைக்கு கவலை தர, 'நல்ல முறையில் தொழில் சென்றுகொண்டிருக்கும்போது இப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறானே' என வருந்தினார். காந்தி என் மகனுக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார் என போவோர் வருவோரிடம் புலம்பித்தள்ளினார். அரைகுறை மனதுடன் தொழில்செய்த ராஜாஜி ஒருநாள் அதை திடுதிப்பென விடவேண்டியதானது. 

ஒருமுறை கொலை வழக்கொன்றில் திறமையுடன் வாதாடி வெற்றிபெற்ற ராஜாஜி அதற்காக தன் சக வழக்கறிஞர்களுக்கு சிறுவிருந்து ஒன்றை அளித்தார். அப்போது அங்கு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் வந்தார். “ஐயா குற்றம் செஞ்சேன்னு தெரிஞ்சும் சாமர்த்தியமா பேசி துாக்கிலிருந்து என்னை காப்பாத்திட்டீங்க. அப்படியே இன்னொரு உதவியும் செய்யணும்...என்றான். “என்ன உதவி என்றார் ராஜாஜி. “கொலைக்கு பயன்படுத்தின கத்தி பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துல பயன்படுத்திட்டு வர்றது... அதனால் எப்படியாவது நீதிமன்றத்துல மனு போட்டு அதை வாங்கித்தரணும்” என்றான். குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். 'பணத்துக்காக உடலை விற்பவளைவிட, காசுக்காக அறிவைப்பயன்படுத்தி ஒரு குற்றவாளியை காக்கும் வழக்கறிஞர் செயல் கேவலமானது... இனி எக்காலத்திலும் உண்மையான வழக்குகளையே எடுத்து நடத்துவேன்' என உறுதியெடுத்துக்கொண்டார். சிறிது சிறிதாக வழக்குகளை குறைத்துக்கொண்டு இந்திய சுதந்திரப்போரில் பங்கேற்கும் முடிவெடுத்தார். காந்தியின் அஹிம்சை ஆயுதமே பிரிட்டிஷாரை விரட்டும் சக்தி மிக்கதாக மாறும் என பெரிதும் நம்பினார். காந்தியை நேரில் சந்தித்து அவரது பணிகளை ஏற்று நடத்தும் தளகர்த்தர்களில் ஒருவராகதன்னை ஆக்கிக்கொண்டார். ராஜாஜியின் சாதுர்யமான வாதங்கள் நடவடிக்கைகள் உறுதியான குணம் இவை காந்தியின் முதல்வரிசை தளகர்த்தராக அவரை உயர்த்தியது. 

1919 ல் ரவுலட் சட்டத்துக்கு எதிராக நடந்த இந்தியா தழுவிய பொது வேலைநிறுத்தம்தான் இந்தியாவில் காந்தியின் தலைமையின் கீழ் முழுமையான  நடந்த முதற்போராட்டம். சென்னையில் ராஜாஜியின் விருந்தினராக காந்தி வந்து தங்கியிருந்த சமயத்தில்தான் இந்த போராட்டத்தின் வியயூகங்கள் வகுக்கப்பட்டன என்பது வரலாறு. அப்போது காந்தியுடன் அவரது நான்காவது மகன் தேவதாஸ் காந்தியும் ராஜாஜி வீட்டுக்கு வந்திருந்தார். இதே காலகட்டத்தில் அகில இந்திய அரசியலுக்கு இந்தி மொழி அவசியம் என்பதை உணர்ந்து அதை கற்றுக்கொள்ள விரும்பினார் ராஜாஜி.  காந்தி டெல்லி திரும்பியபோது தேவதாஸ் அவருடன் செல்லவில்லை. சில பணிகளுக்காக சென்னையில் அவர் தொடர்ந்து தங்கினார். இதனால் தேவதாஸ் காந்தியிடமே இந்தி மொழியைக் கற்றார் ராஜாஜி. தொடர்ந்து இந்தி வகுப்புகளை நடத்தி தம் நண்பர்களுக்கும் இந்திமொழிப் பயிற்சி அளித்தார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் தேவதாஸ். இந்த காலகட்டத்தில் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் புதல்வி லஷ்மிக்கும் ஒருவித புரிதல் உண்டானது. படித்த, நல்ல விமர்சனப்பார்வையும், பலவிஷயங்களில் ஞானமும் பெற்ற தேவதாஸ் மீது லஷ்மி காதல்கொண்டார். இருவீட்டிலும் துணிந்து தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்டனர் காதலர்கள். 

காந்தி

ராஜாஜி, காந்தி இருவருக்குமே அதிர்ச்சி. தேச சேவையில் ஒன்றிணைந்து பணியாற்றிவரும் தங்களின் நட்புக்கு வந்த சோதனையாக இதை கருதினார் காந்தி. மகனின் மனதை மாற்ற முடியுமா என சில சோதனைகளை வைத்துப்பார்த்தார். தேவதாஸ் உறுதியாக நின்றார் தன் காதலில். ராஜாஜி வீட்டிலும் இதே நிலை. 

இருவரும் பேசி முடிவுக்கு வந்தனர். தங்கள் பிள்ளைகளை அழைத்த அவர்கள், “இருவரும் உங்கள் காதல் உண்மையானது என்றால் இன்றிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நீங்கள் சந்திக்கவோ கடிதப்போக்குவரத்தோ வைத்துக்கொள்ளக்கூடாது. நேர்மையுடன் இதை கடைபிடித்தால் உங்கள் திருமணத்தை நடத்திவைக்கிறோம்” என்றனர். நிபந்தனையை ஏற்று தத்தம் வேலைகளில் ஈடுபட்டனர் காதலர்கள். இந்த 5 ஆண்டுகளில் இருவரது மனமும் அதே மனநிலையில் இருந்தது. அவர்களது காதல் இன்னும் பலமாகியிருந்தது. உண்மையில் இந்த பிரிவு இருவரது மனதையும் மாற்றிவிடும் எனக் கணக்கிட்டே அப்படி ஓர் நிபந்தனையை விதித்தனர் ராஜாஜியும் காந்தியும். ஆனால் பிள்ளைகளின் உறுதி அவர்கள் மனதை கரைத்தது. திருமணத்துக்குச் சம்மதித்தனர். 

1933-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைமீண்டிருந்த காந்தி, பர்ணகுடியில் தங்கியிருந்தார். பல மாத சிறைவாசம் அவரது உடலை கரைத்திருந்தது.“சுதந்திரப்போராட்டக் களத்தில் எதுவும் நடக்கலாம். அதனால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஓர் முடிவெடுக்கவேண்டியது அவசியம். பாபுஜியின் சம்மதம் கேட்டுப்பெற்றால் நான் மகளை அழைத்துவருவேன். அங்கேயே திருமணம் நடத்திவிடலாம்” என ராஜாஜி கஸ்துாரிபாய்க்கு ஓர் கடிதம் எழுதினார்.  சில தினங்களில் ராஜாஜிக்கு நல்ல தகவல் கிடைத்தது.
பர்ணகுடியில் 1933-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி லட்சுமி-தேவதாஸ் காந்தி திருமணம் நடைபெற்றது. திருமணம் மிக எளிமையாக நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி. மணமகளின் தந்தை ராஜாஜிக்கு ஆன செலவு சென்னை - பர்ணக்குடி ரயில் டிக்கட் செலவு மட்டுமே. மருமகளுக்காக கஸ்துாரிபாய் 2 தங்க வளையல்களையும் 4 கதர்ப்புடவைகளையும் வாங்கிவைத்திருந்தார். காந்திஜியிடம் அதற்கு அனுமதிபெற அவர் படாதபாடுபடவேண்டியதானது. 

லட்சுமி

திருமணத்தில் கூட்டம் அதிகம் இருக்கக்கூடாது என்பதற்காக தன்னுடன் ஆசிரமத்துக்கு உதவியாக வந்தவர்களையும் திருப்பியனுப்பினார் காந்தி. தனக்கு நெருங்கியவர்களுக்குக்கூட தகவல் சொல்லவில்லை அவர். ஆனாலும் சீனிவாச சாஸ்திரி, தொழிலதிபர் ஜி.டி.பிர்லா, சரோஜினிதேவி உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். கலப்புத் திருமணம் என்றாலும் சாஸ்திரிய முறைப்படி திருமணம் நடந்தது. மணமக்கள் மாலைகளுக்கு பதிலாக நுால் மாலைகளை மாற்றிக்கொண்டனர். பரிசு எதையும் வழங்கக்கூடாது என கறாராக கூறினார் காந்தி. எல்லோரும் அதை ஏற்றனர். பிர்லா மட்டும் வற்புறுத்தவே அவர் அளித்த 4 பட்டுப்புடவைகளில் சாதாரணமான ஒன்றை ஏற்றுக்கொண்டார் காந்தி. சிறையில் இருந்ததால் நேருவும் பட்டேலும் திருமணத்துக்கு வர இயலவில்லை. அங்கிருந்தபடியே வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்கள். தம்பதிகளுக்கு தன் கையால் நெய்த நுால்மாலையும் பகவத் கீதை புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார் காந்தி. 

அப்போது தன் காலில் விழுந்துவணங்கிய தம்பதிகளிடம் அசரீரி போன்று சில அறிவுரைகளை வழங்கினார் காந்தி. “இந்த திருமணத்தில் தர்மத்துக்கு விரோதமான எந்த காரியமும் நடக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். அப்படி அதர்மமான காரியமாக இதை நான் கருதினால் இந்த திருமணத்துக்கு வந்திருக்கவே மாட்டேன். தவத்தைப் போன்ற உங்களின் உறுதியாலும் ஒருவருக்கொருவர் கொண்ட அன்பினாலும்தான் எங்களது சம்மதத்தையும் ஆசியையும் பெற்றிருக்கிறீர்கள். கடவுளுக்கு அஞ்சி பணிவுடன் நடந்துகொள்ளுங்கள். எனக்கும் என் நண்பர் ராஜாஜிக்குமான நட்பு இதன்மூலம் இன்னும் மேன்மை அடையும்படி உங்கள் வாழ்க்கை இருக்கவேண்டும்” என்றார். 

பின்னர் மகனை நோக்கி, என் நண்பர் ராஜாஜியிடம் இருந்து அரியதொரு பொக்கிஷத்தை நீ பறித்துக்கொண்டாய். அந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டியது இன்றுமுதல் உன் பொறுப்பு” என்றார். சுதந்திரப்போராட்டக் களத்தில் தளபதிகளாய் தோளோடு தோள் நின்று களப்பணியாற்றிய காந்தியும் ராஜாஜியும் எதிர்பாராதவிதமாக உறவுமுறை ஆனதில் அன்றையதினம் நெகிழ்ந்துபோய் காணப்பட்டனர் இருவரும். தன் மகன்களில் ஒருவருக்கு தமிழகத்தில்பெண் எடுத்தது குறித்து காந்தி ஒருமுறை “எதிர்பாராத நல்வினைப்பயனால் ஏற்பட்ட ஒன்று அது” என குறிப்பிட்டார். தம் மகனுக்கு பெண் எடுத்து தமிழகத்தின் சம்பந்தியானார் காந்தி.

காந்தி

பின்னாளில் தேவதாஸ் காந்தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இந்த தம்பதிக்கு ராம்சந்திர காந்தி, ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, மற்றும் தாரா என நான்கு பிள்ளைகள். இவர்களில் கோபாலகிருஷ்ண காந்தி கடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக  நின்று வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

இந்தியா முழுமைக்குமான தேசத்தலைவராக இருந்தாலும் காந்திக்கு தமிழகத்தின் மீது எப்போதும் ஒரு கூடுதல் அன்பு இருந்ததுண்டு. 
1921-ம் ஆண்டு தமிழக சுற்றுப்பயணம் வந்த காந்தி, மதுரையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் இந்தியர்கள் முழுமையாக உடை அணியும் நிலையில் கூட இல்லை என்பதை அறிந்தார். அதன்பிறகே பிற்காலத்தில் அவரது அடையாளமாகிப்போன அரை நிர்வாண உடையை அணியத்துவங்கினார். அவரது இறுதி ஆசைப்படி அவரது அஷ்தி, புனித நதிகளிலெல்லாம் கரைக்கப்படும் என அன்றைய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக்கரையருகில் 12.2.1948 அன்று அஸ்தி கரைக்கப்பட்டது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!