நெல்லையில் ரயில் விபத்து - குடும்பத்தினர் கண்ணெதிரில் எஸ்.ஐ பலியான சோகம்!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், குடும்பத்தினரின் கண்ணெதிரிலேயே ரயில் சக்கரத்தில் சிக்கிப் பலியான சோகம் நெல்லையில் நடந்தது

ரயில் விபத்தில் பலியான எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் நாகராஜன். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றிய இவர் நெல்லை டவுனில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சகோதரியின் மகளுக்கு கும்பகோணத்தில் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதால் அதில் பங்கேற்க குடும்பத்துடன் ரயிலில் செல்ல முடிவு செய்திருந்தார். 

குடும்பத்தினர் சோகம்

ரயிலில் முன்பதிவு செய்யாததால் பாசஞ்சர் ரயிலில் செல்ல அவரின் மனைவி, மகள், மகன்கள் முடிவு செய்தனர். ரயில்வே ஸ்டேஷனுக்குள் ரயில் வந்தபோது முன்கூட்டியே ஏறி குடும்பத்தினருக்கு இருக்கை வசதி செய்வதற்காக அவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது கால் வழுக்கியதால் ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இதில், அவர் கால்மீது டிரெயின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. 

குடும்பத்தினர் கண் எதிரில் இந்தச் சம்பவம் நடந்ததால் அவரின் குடும்பத்தினர் அலறித் துடித்தனர். இது நெல்லை சந்திப்பு நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நெல்லை ரயில் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!