வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (02/10/2017)

கடைசி தொடர்பு:14:17 (02/10/2017)

’தண்ணீரை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்!’ - மேட்டூர் அணையைத் திறந்துவைத்த அமைச்சர் கோரிக்கை

காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்படும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (அக்.2)  தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் எட்டு கண் மதகு வழியாகத் தண்ணீர் சீறிப் பாய்ந்தோடிச் செல்கிறது.

இதற்கான விழா இன்று மேட்டூர் அணையில் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வருவாய்த்துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் திறந்துவிட்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ-கள் வெங்கடாசலம், சக்திவேல், செம்மலை உட்பட பல எம்.எல்.ஏ-களும் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் கலந்துகொண்டார்.  

தண்ணீர் திறந்துவிட்டுப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ''விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அதன்படி இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கடைமடைப் பகுதியை 11 நாட்களுக்குள் சென்றடையும். இந்தத் தண்ணீரை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்தி பாசன வசதி செய்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் தண்ணீரைத் திறந்து விடுவதன் மூலம் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். 12 மாவட்டங்கள் பயனடையும். தற்போது 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும். தமிழக முதல்வர் மத்திய அரசிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தற்போது குறைவான தண்ணீர் அணைக்கு வந்துகொண்டிருப்பதால் குறைவான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கூடுதலாகத் தண்ணீர் வரும்போது இன்னும் கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய கடன் தொகை வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. கடன் தருவதில் ஏதாவது குளறுபடி இருந்தால் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

mettur dam


இதுப்பற்றி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், ''தற்போது காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்காக தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சார்பாக வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கம்போல் ஜூன் 12 முதல் ஜனவரி 28-ம் வரை குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த ஜூன் மாதம் கடும் வறட்சியால் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. மேட்டூர் அணை வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தார்கள்.

தற்போது தென்மேற்குப் பருவமழையால் கேரளா, கர்நாடகப் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பொழிந்து மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அணையில் 94 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழையால் பரவலாக மழை பொழிந்துள்ளதால் இந்த வருடம் விவசாயம் செழிப்படையும்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க