வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (02/10/2017)

கடைசி தொடர்பு:18:35 (02/10/2017)

திருச்சியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்கம்  

திருச்சி இரயில்வே நிலையம் அருகே உள்ள கதர் அங்காடி வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவள்ளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன், காதி மண்டலத் துணை இயக்குநர் என்.மணிவாசகன் சகிதமாக மாவட்ட கலெக்டர் ராசாமணி, மகாத்மா காந்தி திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்தார்.

திருச்சியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனைமேலும் அவர்,

“திருச்சி உதவி இயக்குநர் கட்டுப்பாட்டின்கீழ் ஜங்சன் ரயில் நிலையம் அருகில் காதிகிராப்ட் ஒன்றும் மணப்பாறையில் ஒன்றும், கதர் அங்காடி வளாகம், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், அந்தநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது.  மேலும், தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக வையம்பட்டி, திருவெறும்பூர், மண்ணச்ச நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தற்காலிகக் கதர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கதர் விற்பனையில் கடந்த ஆண்டு ரூ.68.54 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூபாய் 56.53 லட்சத்துக்கு  விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடு ரூ.68.54 லட்சங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமமும் தங்களது தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட கதர் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் நெசவு நெய்தல் மூலம் பயன் பெறுகின்றனர். மேலும் தேனீ வளர்த்தல், சோப்புத் தயாரித்தல், கைமுறைக் காகிதம் தயாரித்தல், காலணிகள் தயாரித்தல் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் போன்ற கிராமத் தொழில்களால் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

கதர், பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமும் பட்டு 30 சதவிகிதமும் மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்குக் கடன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கதர் அங்காடிகளில் தரமான கதர், பாலியஸ்டர், அசல் வெள்ளி ஜரிகையாலான பட்டு ரகங்கள், உல்லன் ரகங்கள், சுத்தமான இலவம் பஞ்சாலான மெத்தைத் தலையணைகள் மற்றும் போர்வைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து அரசு அலுவலர்கள் பொது நிறுவனங்கள் மற்றும் பொது மக்களும் காதிகிராப்ட்களிலும் ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் தற்காலிகக் கதர் விற்பனை நிலையங்களிலும் தங்களுக்குத் தேவையான துணி ரகங்களையும், மெத்தைத் தலையணைகளையும் பெருமளவில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.திருச்சியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை

இந்தத் தள்ளுபடிக் காலத்தைப் பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்களை வாங்கி பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தை நம்பியுள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்திட உதவிட வேண்டும்” என்றார்.

அதைத் தொடர்ந்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2017-18-ம் கல்வியாண்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற எட்டு பள்ளிகளுக்கு ரூபாய் 95 ஆயிரம் ரொக்கப் பரிசுகளை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க