பாசனத்துக்காக நான்கு அணைகள் அக்டோபர் 5-ல் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

பாசனத்துக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகளிலிருந்து அக்டோபர் 5-ம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு, பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளை ஏற்று 5.10.2017 முதல் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய், தெற்குக் கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்குப் பிரதானக் கால்வாய் மற்றும் வடக்குப் பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். 

அதேபோல், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானித் திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போகப் பாசனத்துக்காக பவானிசாகர் அணையிலிருந்து 5.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள 1,43,747 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!