வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (02/10/2017)

கடைசி தொடர்பு:18:55 (02/10/2017)

சேலத்தில் 40 மணி நேரத்தில் 4 குழந்தைகள் மரணம்!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. சேலத்தில் தொடந்து இரண்டு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி பலரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் சிறுவர்களே பலியாகிறார்கள் என்பது பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. நேற்று (01.10.2017) காலை முதல் இன்று (02.10.2017) மதியம் வரை சராசரி 40 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 குழந்தைகள் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு
 

சேலம் மரவனேரி கோர்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசனின் மகன் ஶ்ரீதர் வயது 14. அவர் வீட்டின் அருகே உள்ள புனிதப்பால் மேல் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வந்தார். நான்கு நாள்களுக்கு முன்பாகக் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் அவரின் மகள் அகல்யா வயது 13. முத்துக்காப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த 10 நாள்களாகக் காய்ச்சல் இருந்து வந்தது. அதையடுத்து மூன்று நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சேலம் ஓமலூர் பொட்டிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் கூலித் தொழிலாளி இவரின் மகள் ஷாலினி வயது 8. அவர் வீட்டின் அருகிலேயே 4-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாள்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று விடியற்காலை மரணம் அடைந்தார்.

சேலம் கலரம்பட்டி மெயின்ரோடு பாரதியார் நகரை சேர்ந்தவர் முகமது மொய்தீன். இவரது 9 வயது மகள் ஆயிஷா. 5-ம் வகுப்பு படித்து வருகிறார். தொடர் காய்ச்சல்  காரணமாக 4 நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த ஆயிஷாவின் உறவினர் இப்ராகிம், ''சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் காய்ச்சலால் பல குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை காய்ச்சல் என்று கொண்டு சென்றாலே முதலில் மரணம் அடைந்தால் மருத்துவமனை பொறுப்பில்லை என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொள்ளுகிறார்கள். போர்க்கால நடவடிக்கையில் செயல்படக்கூடிய மருத்துவர்கள் சரிவர வருவதில்லை. கவனிப்பு என்பது சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் இறந்துவிட்டால் யாரிடமும் சொல்லாமல் உடனே ஆம்புலன்ஸ் வைத்து அனுப்பிவிடுகிறார்கள்'' என்றார்.