வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (02/10/2017)

கடைசி தொடர்பு:07:46 (03/10/2017)

முதல்வர், பிரதமரை அவமதிக்கும் வகையில் நோட்டீஸ்: தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் கைது

முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரனால் நியமிக்கப்பட்ட சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

எஸ்.இ.வெங்கடாசலம்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் வெளியிட்டதாக தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட 37 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், எஸ்.இ. வெங்கடாசலம் உள்ளிட்ட 3 பேரை இன்று காலை கைதுசெய்தனர். இந்தநிலையில், சேலம் மாணவரணி மாநகரச் செயலாளர் சசிகுமார், அஸ்தம்பட்டி பகுதிச் செயலாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி உள்ளிட்ட 3 பேர் தற்போது கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரது கட்சிப் பதவிகளைப் பறிப்பதாகவும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பைப் பறித்த டி.டி.வி. தினகரன், அந்த இடத்தில் எஸ்.இ. வெங்கடாச்சலம் என்பவரை நியமித்திருந்தார்.