வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/10/2017)

கடைசி தொடர்பு:22:30 (02/10/2017)

நெல்லையில் தீபாவளி கதர் விற்பனை இலக்கு ரூ. 56 லட்சம்! - அமைச்சர் ராஜலெட்சுமி தகவல்

நெல்லையில் தீபாவளிக்கு கதர் கிராமத் தொழில்கள் விற்பனை இலக்கு 56 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார். 

காந்தி ஜெயந்தி விற்பனை

நெல்லை மாவட்டம் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு. காந்தியடிகள் உருவப் படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கதர் கிராமத் தொழில்கள் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் .ராஜலெட்சுமி பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, ’’இந்த நிலையத்தில், கதர் வேஷ்டிகள், துண்டுகள், பெட் ஷீட்டுகள், சட்டைத்துணிகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், மெத்தைகள், தலையணைகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்டவை சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. கதர் ரகங்கள், பாலி வஸ்திரா ரகங்கள், பட்டு ரகங்கள் ஆகியவற்றிற்கு 30 சதவிகிதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

அமைச்சர் ராஜலெட்சுமி

அரசு அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தவணை முறையில் கதர் மற்றும் பட்டு ரகங்கள் விற்பனை செய்யப்படும். அவர்கள் 10 தவணைகளில் பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் கடன்விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், நெல்லையில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.56 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் கதர் துணிகளையும், கதர் உற்பத்தி பொருட்களான சோப்பு மற்றும் இதர பொருட்களை வாங்கி பயனடையலாம். இதன் மூலமாக நெல்லை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விற்பனைஇலக்கை அடைய பொதுமக்களும் அரசு ஊழியர்களும் உதவ முடியும். மக்கள் கதர் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்க முன் வர வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்களான முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ்பாண்டியன், மனோகரன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.