வெளியிடப்பட்ட நேரம்: 22:38 (02/10/2017)

கடைசி தொடர்பு:13:40 (10/07/2018)

நெல்லையில் வேகமாகப் பரவும் டெங்கு: 7 வயது சிறுமி உயிரிழந்ததால் பதற்றம்!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயின் காரணமாக 7 வயது சிறுமி உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

டெங்கு பலி

நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோயின் பாதிப்பு கடந்த ஆண்டு தீவிரமாக இருந்தது. இந்த வருடம் நோயைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால் நோயின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முற்றிலுமாக அகற்ற முடியவில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக இந்த நோயின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.  

கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நோயின் பாதிப்பு காரணமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் குழந்தைகள்.

மாவட்டம் முழுவதும் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மட்டும் அல்லாமல் வீதிகள், பொது இடங்களில் தேங்கும் நீர் உள்ளிட்டவற்றில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகாதபடி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், இந்த நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். நெல்லையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30-க்கும் அதிகமானோர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி சுஜிதா என்பவர் டெங்கு நோய் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். பள்ளி மாணவியான சுஜிதா மரணம் பொதுமக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. இதனால் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. நோயின் பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில், பள்ளிகள் திறந்த பின்னர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்த அச்சம் பெற்றோருக்கு எழுந்துள்ளது.