தூய்மை பாரதம் நிகழ்ச்சி: தாமிரபரணி நதியை சுத்தம் செய்த தன்னார்வலர்களுக்கு பரிசு!

தூய்மை பாரதம்

நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தூய்மை பாரதம் நிகழ்ச்சியில், தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட அமைப்புக்கள், தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காந்தி ஜயந்தி விழா மற்றும் தூய்மை பாரதம் திட்டத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா ஆகியன இன்று வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி கலந்துகொண்டார். அப்போது, தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் வகையில் சுத்தம் செய்யும் பணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டும் கவுரவமும் செய்யப்பட்டது.

பரிசுகள்

இந்தப் பணியில் பங்கேற்ற கல்லூரிகள், பள்ளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர், புகைப்படக்காரர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரையும் பாராட்டி, பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், தூய்மை சேவை வாரத்தையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்பு உணர்வு குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, ’’உண்மை, அமைதி, அறவழி, நேர்மை இதுதான் காந்தியடிகளின் தாரக மந்திரம். தேசத்தின் முதுகெலும்பு கிராமம் என்றார். தனது வாழ்நாள் முழுவதும் தனது கழிவறையை தானே சுத்தம் செய்தார். தனது உடைகளைத் தானே துவைத்தார். பாரதத்தை தூய்மையாக்க பல்வேறு விழிப்பு உணர்வு பிரசாரங்களை மேற்கொண்டார். அதனால் நாமும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் முடிந்தவரை கதர் ஆடைகளை அணிய வேண்டும். நமது மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். 

கலை நிகழ்ச்சி

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘தாமிரபரணி தொடங்கும் பாபநாசம் முதல் நெல்லை மாவட்ட எல்கை முடியும் இடம் வரை 60 கி.மீ. தூரத்துக்கு தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பள்ளி. கல்லூரி மட்டும் அல்லாமல் தன்னார்வலர்கள், பொது நல அமைப்பினரும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழகமும் இப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டது. தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெறும்’ எனப் பேசினார். விழாவில் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்த பணியில் ஈடுபட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.  கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!