Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

776 தமிழக சிறைக் கைதிகள் நன்னடத்தை விதியின் கீழ் விரைவில் விடுதலை - ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு தகவல்

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருக்கும் 776 கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலைசெய்யப்பட இருக்கிறார்கள் என சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு திருச்சியில் தெரிவித்தார்.

சைலேந்திரபாபு

திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பல சிறைகளில் சிறைக் கைதிகளால் நடத்தப்பட்டுவந்த உணவகங்கள், அங்காடிகள் ஆகியவை திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், சிறைவாசிகள் நல தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருள்களை, “ஃபிரீடம் பஜார்” அங்காடி மையத்தில் மீண்டும் விற்பனையைத் தொடங்கிவைப்பதற்காக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு திருச்சிக்கு வந்திருந்தார். அப்போது, அவர் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, “சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருள்கள் அனைத்தும் இந்த அங்காடிக்கு விற்பனைக்கு வரும். சிறைவாசிகளைப் பார்க்க வருபவர்களுக்கு, இந்த “ஃபிரீடம் பஜார்” அங்காடி பயனுள்ளதாக அமையும். இந்த அங்காடிகள்மூலம் சுமார் 80 கைதிகள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள். இதில் வரக்கூடிய வருமானத்தில் 20 சதவிகிதம் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும். 40 சதவிகித வருமானம் அரசுக்கும், மீதம் உள்ளவை சிறைத்துறைக்கும் செல்லும். இதன்மூலம், சிறைவாசிகளின் உடல்நலன் மற்றும் மனநலன் முன்னேறும்.​​​​​​​

மேலும் 14 ஆண்டுகள் நிறைவுசெய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, ஆலோசனைக் குழு முடிவின்படிதான் விடுதலைசெய்ய முடியும். தற்போது, ஆயுள்தண்டனைக் கைதிகளை விடுவிக்கும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது. அவர்கள் பரிந்துரைப்படி, ஆயுள் தண்டனை முடித்தவர்களை விடுதலைசெய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதிலும், 22 பெண்கள் உட்பட 776 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலைசெய்யப்பட உள்ளார்கள் என்றவர், சிறை இடத்தை ஆக்கிரமிப்பது என்பது மிகவும் தவறான செயல். அந்தவகையில், சிறைத்துறையின் இடத்தை ஆக்கிரமித்தவர்கள்மீது வழக்குத் தொடுத்துள்ளோம். அந்த வழக்கில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்'' என்றார்.

மேலும், ''சிறைவாசிகள் கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க, தொழில்நுட்ப முறையைக் கையாள முயன்றுவருகிறோம். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் செல்போன் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக 12 மத்திய சிறைகளிலும் ஜாமர் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழக சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்த தமிழக அரசு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழகம் முழுவதிலும் 1000 சிறைக் காவலர்கள் தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் மூலமாகப் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளார்கள். அதன்மூலம், சிறைக்கு 100 காவலர்கள் கிடைப்பார்கள். அவர்களுக்குப் பயிற்சியளித்து, சிறைக் கைதிகள் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில், கைதிகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். அந்தக் கைதிகளில் 776 பேர் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement