வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (03/10/2017)

கடைசி தொடர்பு:10:32 (03/10/2017)

உயர் நீதிமன்ற நீதிபதியை வேலைக்கு அழைத்த தனியார் நிறுவனம்..!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிவருபவர் எஸ்.வைத்தியநாதன். இவரை, தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராகப் பணியாற்ற அழைப்பு விடுத்து, சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன சில தனியார் மனிதவள நிறுவனங்கள்.

திருப்பூரைச் சேர்ந்த  மூன்று நிறுவனங்கள் மற்றும் கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும்  இரண்டு தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து, நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் நீதிபதிக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அதில், தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. வேலையில் சேரும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தனியார் மனிதவள நிறுவனத்துக்கு 250 முதல் 750 ரூபாய் வரை அவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, மத்திய, மாநில அரசுகளின் இலட்சினையுடன் கடிதத்தை அனுப்பியுள்ளனர் அந்நிறுவனத்தினர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. வழக்கின் விசாரணையில், இதுவரை எத்தனை பேருக்கு இதுபோன்று கடிதத்தை அந்நிறுவனத்தினர் அனுப்பியிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எவ்வளவு தொகையை அந்நிறுவனத்தார் வசூலித்திருக்கிறார்கள். குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் அதிகாரபூர்வ இலட்சினை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களை அளிக்குமாறு, தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, திருப்பூரில் இயங்கிவரும் சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்களில், மாநகர காவல்துறை ஆணையா் நாகராஜன் விசாரணை நடத்தினார். அந்நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆவணங்கள், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பிய ஆவணங்களை செவ்வாய்க்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார், காவல்துறை ஆணையர்.