இந்திய ஓட்டுநரைக் காப்பாற்றியவருக்கு 'தைரியப் பெண்' விருது!

மீரகத்தில், தீயில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இந்திய ஓட்டுநரைக் காப்பாற்றியவருக்கு, 'தைரியப் பெண் 'விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய ஒட்டுநரைக் காப்பாற்றியவருக்கு தைரிய பெண் விருது

ஆஜ்மன் அருகேயுள்ள ராஸ் அல் கமையா நகரில், சாலை விபத்தில் சிக்கிய இரு ட்ரக்குகள்  தீப்பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ட்ரக் ஓட்டுநர் ஹர்கீத் சிங், நெருப்பில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். நெருப்பில் சிக்கிய சிங்கைப் பார்த்து அருகிலிருந்த பணியாளர்கள் சிலர் செய்வதறியாது திகைத்து நின்றனர். யாருக்கும் உதவத் துணிவு வரவில்லை. 

அந்தப் பகுதியை தோழியுடன் காரில் கடந்த ஜவாஹெர் அல் குமைதி என்ற 22 வயது இளம் பெண், விபத்தைப் பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தினார். பின்னர், தாங்கள் அணிந்திருந்த பர்தாக்களைக் கழற்றி, துணிச்சலாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு, சிங் மீது பற்றியிருந்த தீயை அணைத்தார். இதனால், அந்த ஓட்டுநரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஜவாஹெரின் துணிச்சல்மிக்க  செயலை அமீரக அரசு அங்கீகரித்து, அவருக்கு தைரியப் பெண் விருது வழங்கி கௌரவித்துள்ளது. அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும் ஜவாஹெரை கெளரவிக்க உள்ளது. 

சம்பவம்குறித்து ஜவாஹெர் கூறுகையில், '' டிரைவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் திகைப்படைந்து நின்றனர். அவரின் நிலையைப் பார்த்தவுடன் எனக்கோ மனம் பதறியது. என் தோழியின் பர்தாவையும் கையில் வைத்திருந்தேன். அவரின் உடலில் இருந்த துணிகள் எரிந்திருந்தன. 'என்னைப் பார்த்ததும் நான் செத்துக்கொண்டிருக்கிறேன்' எனக் கூச்சலிட்டார்.

அமீரகப் பெண் காப்பாற்றிய இந்திய டிரைவர் சிங்

முதலில், ஒரு பர்தாவை அவர் மீது போர்த்தினேன். மற்றொன்றைக்கொண்டு நெருப்பை அணைத்தேன்.  'கொஞ்சம் அமைதியாக இருங்கள் நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள் ' என ஆசுவாசப்படுத்தினேன். சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். இதனால், அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. அந்த நேரத்தில், ஒரு உயிரைக் காப்பற்ற வேண்டுமென்ற சிந்தனை மட்டுமே எனக்குள் மேலோங்கியிருந்தது. தக்க தருணத்தில் ஓர் உயிரைக் காப்பற்றும் சக்தியை அளித்த இறைவனுக்கு நன்றி'' என்றார். 

ஜவாஹெர் அல் குமாதி, ஷார்ஜாவில் உள்ள 'அட்நான் ஒயாசிஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!