ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு! | Barcelona to quit from Spanish league

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (03/10/2017)

கடைசி தொடர்பு:11:50 (03/10/2017)

ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு!

ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக கட்டலோனியா மாகாணம் போராடிவந்தது. சுதந்திர நாடாகச் செயல்படுவதுகுறித்து கட்டலோனியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்டலோனியா தனி நாடாகச் செயல்பட மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கட்டலோனியா பிரிந்துசெல்லும் பட்சத்தில், பார்சிலோனா கால்பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளையாட அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் லீக்கில் சனிக்கிழமை நடந்த  பார்சிலோனா- லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. 

ஸ்பானீஷ் லீக்கில் இருந்து பார்சிலோனா வெளியேறுகிறது

இந்நிலையில் , ''கட்டலோனியா சுதந்திர நாடாக மாறும்பட்சத்தில், பார்சிலோனா அணி ஸ்பானிஷ் லீக்கில் தொடர்ந்து ஆடாது '' என்று கிளப் தலைவர் ஜோசப் மரியா போர்ட்டமு அறிவித்துள்ளார். கட்டலோனியா மாகாணத்தில் பார்சிலோனா, எஸ்பான்யல், ஜிரானா அணிகள் செயல்பட்டுவருகின்றன. இந்த அணிகள், தங்கள் விருப்பம்போல அருகில் உள்ள நாடுகளில் விளையாட வாய்ப்புள்ளது. 

பிரான்ஸின் லீக்-1 , இத்தாலி ’சீரிஸ்- ஏ’, இங்கிலாந்து ப்ரீமியர் லீக் ஆகிய தொடர்களில் பார்சிலோனா அணி பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு, ப்ரீமியர் லீக்கில் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வான்ஸீ அணி பங்கேற்றுவருவதை உதாரணமாகச் சொல்லலாம். பார்சிலோனா இல்லாத ஸ்பானிஷ் லீக்கை நினைத்துப்பார்க்க முடியாது. கிளப் கால்பந்தின் உச்சகட்ட மோதலாகக் கருதப்படும் ரியல்மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் 'எல்க்ளாசிகோ' மோதல் நடைபெறாது.  சாம்பியன்ஸ் லீக் தொடரில் மட்டுமே பார்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், ஸ்பானிஷ் லீக் தொடர் தன் மவுசை இழக்கும் நிலை ஏற்படலாம்.

வெளிநாட்டு லீக்கில், பார்சிலோனா அணி பங்ககேற்க அனுமதிக்கப்பட்டால், இங்கிலீஸ் ப்ரீமியர் லீக்தான் அந்த அணியின் தேர்வாக இருக்கும். ப்ரீமியர் லீக்கில் பார்சிலோனா பங்கேற்கும்பட்சத்தில், அந்தத் தொடரின் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. 

ஸ்பெயின் தேசிய அணியிலும் பார்சிலோனா அணி வீரர்களே அதிகம் பேர் இடம் பெற்றிருப்பார்கள். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில், பார்சிலோனா அணி வீரர்கள்  7 பேர் இடம்பிடித்திருந்தனர். கட்டலோனியா சுதந்திர நாடாகும்பட்சத்தில் ஸ்பெயின் தேசிய அணியும்கூட பாதிக்கப்படும். இதற்கிடையே, மாட்ரிட் நகரில், நேற்று ஸ்பெயின் அணி பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியில் பங்கேற்ற  பார்சிலோனா அணி வீரர் ஜெரார்ட் பிக்கேவை எதிர்த்து  ரசிகர்கள் கூச்சலிட்டு இடையூறு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 23 நிமிடங்களில் பயிற்சி ரத்துசெய்யப்பட்டது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க