பரோலில் சசிகலா வந்தால் அ.தி.மு.க-வில் என்ன நடக்கும்? அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி பதில்

பரோலில் சசிகலா வர இருப்பதால், அ.தி.மு.க-வில் பெரிய மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாகப் பதிலளித்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராசன், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே, கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, பரோலில் சசிகலா வரயிருப்பதால், அ.தி.மு.க.வில் பெரிய மாற்றம் ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், பரோலில் சசிகலா வந்தாலும் அ.தி.மு.க-வுக்கு எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று தடாலடியாகக் கூறினார்.

புலிகேசி ஆட்சி நடைபெறுகிறது என டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தினகரன் ஒரு புலிகேசி என்று சாடினார்.

தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, தினகரன் என்ன காந்தியா என்று கூறிய ஜெயக்குமார், யார் குற்றம் செய்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் நடைபெற்றுவருகிறது என்றும் சட்டமன்றத் தேர்தல் வருவதை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விரும்பவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!