Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கழுதையைப் பார்த்தாவது யோகம் வரட்டும்' - போராட்டத்தில் போலீஸை அதிரவைத்த கட்சி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகரத் தலைவர் ராஜகோபாலிடம் பேசினோம். ‘கோவில்பட்டி, பழைய பேருந்து நிலையம் என அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். ஆனால், அப்போது முக்கால்வாசி பணிதான் முடிந்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், இந்தப் பேருந்து நிலையத்தை ‘சி’ கிளாஸ் பேருந்து நிலையமாக அறிவித்தார். ஆனால், ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையம் ‘பி’ கிளாஸ் அந்தஸ்தில் இருந்தது. அதிலிருந்து ஒருபடி தரம் இறங்கியுள்ளது, சீரமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம். முன்பு, 28 பேருந்துகளைப் நிறுத்திவைக்கும் அளவுக்கு இடவசதி இருந்தது. தற்போது 18 பேருந்துகளை மட்டுமே நிறுத்திவைக்க முடியும். பேருந்து நிலையத்திலுள்ள இலவசக் கழிப்பறையைச் சரிவர பராமரிக்காததால், யாரும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கட்டணக் கழிப்பிடம் அமைக்கும் பணியைத் தொடங்கவில்லை. இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் இந்தப் பேருந்து நிலையத்தில், புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. செயின் பறிப்பு, திருட்டு ஆகியவை துணிகரமாக நடந்துவரும் நிலையில், புறக்காவல் நிலையம் இல்லாததால் மேலும் இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும்கூட போலீஸாரை அணுகி புகார் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில் சரியான ரோடு அமைக்காததால் மழை பெய்தால் பேருந்து நிலையத்துக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பயணிகள் அமர நிழற்குடை அமைக்கப்படவில்லை.

பேருந்துகள் வந்துசெல்லும் நேரம்குறித்து பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய கால அட்டவணை வைக்கப்படவில்லை. எனவே, இந்தக் குறைகளை உடனடியாகச் சரிசெய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டி நகராட்சியைக் கண்டித்தும், பேருந்து நிலையத்துக்குள்  இரண்டு கழுதைகளை நிறுத்திப் போராட்டம் நடத்தினோம். கழுதையைப்  பார்த்தாலாவது இந்த பஸ்நிலையத்துக்கு யோகம் வரட்டும்’ என்றார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement