வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..! தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள்!

தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகம் முழுவதும் 5,95,88,002 பேர் உள்ளனர். 


தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, வாக்காளர் வரைவுப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர். வரைவில், ஆண்கள்-2,94,84,492 என்றும் பெண்கள் 3,00,98,268 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 3,10,542 பேர் உள்ளனர். 

தேனி

அதேபோல, தேனி மாவட்டத்தில் உள்ள வாக்காளர் வரைவுப் பட்டியல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. மாவட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், வாக்காளர் வரைவுப் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் பெரியகுளம், உத்தமபாளையம் கோட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர். மேலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முனீஸ்வரன், தி.மு.க-வின் வீனஸ் கண்ணன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஹக்கீம் போன்றோர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 10,46.997ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, அக்டோபர் 3-ம் தேதி கணக்கின்படி 10,54,263ஆக உயர்ந்துள்ளது. 10,390 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 3,124 வாக்காளர்கள் திருத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 159-லிருந்து 162ஆக உயர்ந்துள்ளது.

ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு தொகுதிகளையுடைய தேனி மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுப் பேசிய ஆட்சியர் வெங்கடாசலம், "இந்தியத் தேர்தல் ஆணையம், சமீபத்தில் மென்பொருள் ஒன்றை அறிமுகம்செய்தது. அதன்மூலம் இரட்டை வாக்கு தடுக்கப்படும். ஒரே பெயரில் இரு இடத்தில் வாக்களிக்கும் ஏமாற்று வேலை இனி நடக்காது. ஏற்கெனவே, பட்டியலில் இருக்கும் இரட்டை வாக்காளர்களைக் கண்டுபிடித்து நீக்கும் நடவடிக்கை முடிந்திருக்கிறது. மக்களின் விழிப்புஉணர்வும், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் இருந்தால், இரட்டை வாக்காளர்களை முழுவதுமாக ஒழிக்க முடியும்'' என்றார். 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,24,679 வாக்காளர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இன்று வெளியிட்டார். இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,61,868 ஆண் வாக்காளர்களும், 5,62,744 பெண் வாக்காளர்களும், 67 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 11,24,679 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கான புகைப்பட வாக்காளர் துணை பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், சார்-ஆட்சியர் அலுவலகங்களிலும், முழுமையான வாக்காளர் பட்டியல் வாக்குசாவடி மையங்களிலும், நகர பகுதிகளில் குடியிருப்போர் நல சங்கத்தாரிடமும், கிராம பகுதிகளில் கிராமசபை நிர்வாகத்தாரிடமும் மேலும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமும் பாகம் வாரியாக வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வாக்காளர்களாக இணைய விரும்புவோர், தொகுதி மாறி குடியிருப்போர், ஒரே தொகுதிக்குள் முகவரி மாறியிருப்போர் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை இன்றிலிருந்து (03.10.2017) பெற்றுகொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர்  31-ம் தேதிக்குள் உரிய அலுவலர்களிடம் அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் வெளியிட்டின்போது  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், கோட்டாட்சியர்கள் பேபி, அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!