அடுத்தடுத்து 3 பேர் பலி! டெங்கு பீதியில் முதல்வர் தொகுதி மக்கள்

சேலம் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. சேலத்தின் பல பகுதிகளில் குழந்தைகள், முதியோர்கள் என பலர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி வருகிறார்கள். நேற்று முதல்வர் பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் மட்டும் 3 பேர் மர்மக் காய்ச்சலுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் மட்டும் உள்நோயாளிகளாக 1000-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். புறநோயாளிகளாக மர்மக் காய்ச்சலால் வந்து செல்லக்கூடியவர்கள் 2500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைகள் நிறைந்துள்ளது.

நேற்று முதல்வர் பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் 3 பேர் மர்மக் காய்ச்சலுக்குப் பலியாகி இருக்கிறார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியில் வராத அளவுக்கு அவசரமாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்ய வைத்திருக்கிறார்கள். எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் மகன் பழனிவேலாயுதம். வயது 11. அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 5 நாள்களாகத் தொடர் காய்ச்சல் இருந்ததையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார். எடப்பாடி தொகுதி சடையம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து (30). இவருக்குத் தொடந்து ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்து வந்தது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நேற்று திடீரென மரணம் அடைந்தார்.

இவரைப் போலவே கோண்சமுத்திரத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (65). இவரும் கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்து வந்தது. வீட்டுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நேற்று திடீரென இறந்துவிட்டார். முதல்வர் தொகுதியில் நேற்று ஒரே நாள் மட்டும் மர்மக் காய்ச்சலால் 3 பேர் மரணம் அடைந்தது சேலம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!