முதல்வர் பழனிசாமிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் போர்க்கொடி!


'தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.

”ஜி.எஸ்.டி வரியை அனுமதித்த மாநில அரசே! அடிமை அரசே! எடப்பாடி அரசே! ராஜினாமா செய்!.. தமிழ்நாட்டை அடகு வைத்த மாநில அரசே! அடிமை அரசே! எடப்பாடி அரசே! ராஜினாமா செய்!... நீட் தேர்வை அனுமதித்து ஊழல் மலிந்த எடப்பாடி கே.பழனிசாமி அரசே! ராஜினாமா செய்!...” என்ற பதாகைகளை ஏந்தியவாறு கம்யூனிஸ்ட் போராட்டம் செய்தார்கள்.

இதுப்பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன், ''தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு விரோதமாக மத்திய அரசின் பல திட்டங்களைக் கொண்டு வந்து தமிழக மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.  நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெற உரிய நடவடிக்கை எடுக்காமல் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. 

இந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அரசு. அதே போல சுகாதார வசதிகள் செய்யாமல் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்குப் பல உயிர்கள் மடிந்துபோகக் காரணமாகவும் செயல்படாத அரசாகவும் இருந்து வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க தவறி விட்டார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. 


இந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களை பற்றிக் கவலைப்படாமல் தினகரனை பற்றியும் சசிகலாவைப் பற்றியும் உட்கட்சி பிரச்னைகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் தனக்கு என்ன என்று மெத்தனப் போக்கோடு இந்த அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 


ஊழல் மலிந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த மைனாரிட்டி அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும் போராட்டம் செய்துகொண்டிருக்கிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!