Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நடப்பது அ.தி.மு.க. ஆட்சியே அல்ல..!” போட்டுத் தாக்கும் புலமைப்பித்தன்

ஜெயலலிதா

.தி.மு.க ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர், கட்சியின் அவைத்தலைவர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மூத்தத் தலைவர் புலவர் புலமைப்பித்தன்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், பாராட்டுப்பெற்றவரான புலவர் புலமைப்பித்தனிடம் அ.தி.மு.க-வின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசினோம்...

“அ.தி.மு.க-வில் தற்போது நடைபெற்றுவரும் உள்கட்சிப் பிரச்னைகள் குறித்து, கட்சியின் மூத்த தலைவராக உங்களுடைய கருத்து என்ன?”

“ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில், எல்லோருமே நிதானித்துத்தான் எதுவும் பேசவேண்டும் என்கிற நிலைமை இருந்தது. அந்த அளவு அந்த இரும்பு மனுஷியின் ஆட்சி இருந்தது. ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப ஆள் இல்லாமல் கட்சி கலகலத்துப்போய்க் கிடக்கிறது. கட்சியில் இப்போது நீடித்துவரும் குழப்பங்கள்-பிரச்னைகள் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்; ஆனால், தவிர்க்கப்பட முடியாமல் போயிற்று.''

“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?''

''அதைப்பற்றி சரியான விமர்சனம் செய்வதென்பது, இன்றைய நிலையில், சரியில்லை எனக் கருதுகிறேன்.''

புலவர் புலமைப்பித்தன்''எதனால்?''

''இன்றைய ஆட்சி என்னுடைய மனதுக்கு முழுமையான நிறைவைத் தரவில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால், இன்னொரு பி.ஜே.பி ஆட்சிதான் இங்கே நடைபெறுவதாகத் தோன்றுகிறது. நடப்பது அ.தி.மு.க ஆட்சியே அல்ல. அதனால், இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை!''

''ஜெயலலிதாவால், முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இடையில் சிறிது காலம் அ.தி.மு.க-வோடு முரண்பட்டு தனி அணியாக அவர் விலகி நின்றதும், தற்போது அதே ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துக்கொண்டு செயல்படுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''எல்லாமே சந்தர்ப்பவாதம்!''

''எடப்பாடி - ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி தினகரன் அணி என பிளவுப்பட்டு நிற்கும் இந்த அணிகளில், அ.தி.மு.க-வை திறம்பட வழிநடத்திச் செல்லக்கூடிய திறமை எந்த அணிக்கு இருப்பதாகக் கருதுகிறீர்கள்?''

''எல்லோருமாக ஒன்றுசேர்ந்து சசிகலாவின் கால்களில் விழுந்து, கும்பிட்டு 'பொதுச்செயலாளர் ஆகவேண்டும்' என்று கேட்டுக்கொண்டதோடு, பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளர் பதவியில் அவரை அமரவைத்தார்கள். இப்போது அதே சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்வதையெல்லாம், முறையான - பண்பாடு உள்ள அரசியலாக நான் கருதவில்லை.''

''அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் என்ற முறையில் உங்களது தனிப்பட்ட ஆலோசனையை தற்போதைய அ.தி.மு.க தலைவர்களிடம் எடுத்துச் சொல்வதுண்டா?''

''ஆடிக் கொண்டிருக்கிற ஊசியில் நூலைக் கோக்க முடியாது! இந்த நேரத்தில், நம்முடைய ஆலோசனைகள் எல்லாம் பயன்படுமா, அறிவுரைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதெல்லாம் சந்தேகத்துக்குரியவை. காரணம், அவரவர் ஒருவிதமான நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டிருக்கிறபோது, நடுநிலையான கருத்துகளை யாரும் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள்.''

சசிகலா

''ஜெயலலிதாவுக்குப் பிறகு, அவரது இடத்தில் யார் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

'' 'தனக்குப்பிறகு ஆட்சியில், ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் அடையாளப்படுத்திச் சென்றார் ஜெயலலிதா' என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், அடையாளமே அசலாகிவிடாது! அடையாளம் காணப்பட்டவர் என்ற காரணத்தினாலேயே, ஜெயலலிதாவின் இடத்தை ஓ.பன்னீர்செல்வத்தால் நிரப்பிவிட முடியாது. அவர் மட்டுமல்ல.... ஜெயலலிதாவின் இடம் என்பது இங்குள்ள வேறு யாராலும் நிரப்பப்பட முடியாத இடம்! எனவே, அதனை காலத்தினுடைய கைகளில் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை!''

''ஜெ. மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றுக்கொண்டது சரியல்ல என்கிறீர்களா?''

''அப்படியல்ல... ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் உடனிருந்து குருகுலப் பயிற்சி பெறுவதைப் போல, அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தவர் சசிகலா. ஜெயலலிதா, எந்த நேரங்களில் எப்படி செயல்படுவார், என்ன முடிவெடுப்பார் என்பது உள்ளிட்ட அவரது அரசியல் ஆளுமையைப் பயிற்சியாகப் பெற்றவர் சசிகலா என்பதை வைத்துப் பார்க்கும்போது, அவர் பொறுப்புக்கு வந்தது ஓரளவு சரியென்றே நான் கருதுகிறேன்.''

ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். டி.டி.வி

''தமிழக முதல்வராகவும் சசிகலா பதவியேற்க முயன்றதையும் வரவேற்கிறீர்களா?''

''சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக எல்லோரும் மனம் உவந்துதானே தேர்ந்தெடுத்தார்கள்? ஆக அது சரிதான். ஆனால், அவரே முதல்வராக பதவியேற்றுக் கொள்ளாமல், தகுதிவாய்ந்த நபரைக் கண்டறிந்து அந்தப் பொறுப்பில் அமர்த்திவிட்டுக் கண்காணிக்கும் பொறுப்பில் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement