வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (03/10/2017)

கடைசி தொடர்பு:08:08 (04/10/2017)

சசிகலா பரோல் மனு நிராகரிப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நிராகரித்தது. 

 

சசிகலா


கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சிறைத்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுதொடர்பாக அக்டோபர் 5-ம் தேதியன்று கர்நாடகச் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்ள சசிகலாவின் விண்ணப்பத்தில், கணவர் நடராஜனின் மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், சசிகலா அளித்த பரோல் மனுவில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி அது நிராகரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கூடுதல் தகவல்களுடன் புதிய மனுவைத் தாக்கல் செய்ய சசிகலாவுக்கு, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கணவர் நடராஜன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.