இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்.!

தேனி பங்களாமேட்டில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கம் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகிரிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆளும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்பாட்டத்தின் மிக முக்கிய நிகழ்வாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த சுமார் 30 பேர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். இவர்கள் அனைவரும் பெரியகுளத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறையைச் சேர்ந்தவர்கள். அவர்களில், முத்துக்குமார் என்பவர் தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர். கடந்த காலங்களில் அ.தி.மு.க-வில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தவர், தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருக்கிறார்.

​​​​​​

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தில் இறங்கியபோது, அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் எனவும், சசிகலாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் இந்த முத்துக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரிடம் பேசியபோது, ’கட்சியில் தீவிரமாக இருந்தவர்கள் நாங்கள். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் அவருடன் நின்றவர்கள். ஆனால், தற்போது துணை முதல்வராக ஆன பின்னர் அவரின் செயல்பாடுகளால் நாங்கள் அதிருப்தியடைந்திருக்கிறோம். அதனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறோம். மேலும், பலர் அ.தி.மு.க-வை விட்டு விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணையவிருக்கிறார்கள்’ என்றார்.

தேனி மாவட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் பக்கம் இருந்து தினகரனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த கட்சி நிர்வாகிகள் பலர், பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆன பின்னர், அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்தநிலையில், பன்னீர்செல்வத்தின் அருகிலேயே இருந்த அவரது உறவினர் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தாவியிருப்பது தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!