காந்தி சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கு? - கொதிக்கும் நெல்லை தே.மு.தி.க-வினர்!

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தே.மு.தி.க நிர்வாகிகள்மீது நெல்லை போலீஸார் வழக்குத் தொடுத்து,  தொடர்ந்து தேடி வருவதால், நெல்லை மாநகர மாவட்ட தே.மு.தி.க-வினர் ஆத்திரமடைந்துள்ளனர். 

காந்தி சிலைக்கு மரியாதை

காந்தி ஜயந்தியை முன்னிட்டு நேற்று நெல்லை டவுனில் உள்ள காந்தி சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க-வினரும் பங்கேற்றனர். நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான முகமது அலி தலைமையில் அக்கட்சியினர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக வந்த சிலர் பைக்குகள் மற்றும் கார்களில் ஊர்வலமாகச் சென்றதால், அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர மாவட்ட தே.மு.தி.க செயலாளர் முகமது அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி உள்ளிட்ட நிர்வாகிகள் 30 பேர்மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதி இல்லாமல் ஊர்வலமாகச் செல்லுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெயர் குறிப்பிட்ட 30 பேரைத் தவிர, மேலும் சிலர்மீதும் வழக்குத் தொடரப்பட்டிருப்பதால் நெல்லை மாநகர தே.மு.தி.க-வினர் தலைமறைவாகும் நிலை உருவாகியிருக்கிறது.

பைக் பேரணி

இதுபற்றி நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகள், ‘காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றமா? இந்த ஆட்சியாளர்களுக்குத் தே.மு.தி.க-வின் வளர்ச்சியைப் பார்த்து அச்சம் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாகவே எங்களைக் கைதுசெய்யத் துடிக்கிறார்கள். குறிப்பாக நெல்லையில் அ.தி.மு.க-வுக்கு வந்த கூட்டத்தை விடவும் எங்கள் கட்சிக்கு அதிகக் கூட்டம் சேர்ந்ததைப் பிடிக்காமல், இப்படி ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இதைச் சட்டப்படி நாங்கள் சந்திப்போம். இருந்தாலும், அகிம்சையைப் போதித்த காந்தி மகான் சிலைக்கு மாலை அணிவித்ததற்கு வழக்குப் போட்டிருப்பது வருத்தமளிக்கிறது’ என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!