வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (04/10/2017)

கடைசி தொடர்பு:19:40 (04/10/2017)

விடைபெற்றது தென்மேற்குப் பருவமழை! வடகிழக்குப்பருவமழை எப்போது?

மழை

ண்ணீர் இன்றி தாகத்தின் பிடியில் சிக்கியிருந்த தமிழகத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வந்த தென்மேற்குப் பருவமழை விடை பெற்றுவிட்டது. வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூலையில் மழை குறைவு

தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை  மட்டும் சரியான நேரத்தில் பெய்யாமல் இருந்திருந்தால், தமிழகம் இன்னும் வறட்சியின் பிடியிலேயே இருந்திருக்கும். ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இருபது நாள்கள் அவ்வளவாக தமிழகத்தில் மழை இல்லை. 21-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 47.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, தமிழகத்துக்கு வறண்ட மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். 30 நாள்களில் ஒரு சில நாள்களைத் தவிர பிற நாள்களில் மழை பெய்யவில்லை. 42.0 மி.மீ மழை மட்டும்தான் பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 38 சதவிகிதம் குறைவாகும்.

மழை மாதங்கள்

ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, மழை மாதம் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. அந்த மாதத்தில் மட்டும் 159.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தைவிட 82 சதவிகிதம் அதிகம். செப்டம்பர் மாதத்தையும் ஈரமான மாதம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 164.98 மி.மீ மழை பெய்திருக்கிறது. 42 சதவிகிதம் அதிகம் பெய்திருக்கிறது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மொத்தமாக 414. 18 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கமான அளவைவிட 31 சதவிகிதம் அதிகம். கடந்த 2016-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை எதுவுமே தமிழகத்துக்கு கை கொடுக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையால் தமிழகம் ஆறுதல் அடைந்திருக்கிறது.

22 வருடங்களுக்குப் பிறகு கூடுதல் மழை

Rain

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை கடந்த 30-ம் தேதி முடிவடைந்தது. வரும் 20-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வேண்டும். இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரனிடம் பேசினோம். “தென்மேற்குப் பருவமழை காலத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும், அந்த காற்றினால்தான் தென்மேற்குப் பருவமழை என்று சொல்கிறோம். இது கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தென்மேற்குப் பருவமழை வழக்கமான அளவைவிட அதிகம் பெய்திருக்கிறது. 22 வருடத்தில் இல்லாத அளவில் இப்போது அதிகம் பெய்திருக்கிறது. 1996-ம் ஆண்டு 51 சதவிகிதம் அதிகம் பெய்திருக்கிறது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வேண்டும். அப்போது காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதால், தமிழகத்துக்கு மழை பெய்யும்.  20-ம் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்போ அல்லது அதற்கு பின்னர் ஒரு வாரம் கழித்தோ பருவமழை தொடங்கும். கடந்த முறையைப் போல அன்றி, இந்த முறை வடகிழக்குப் பருவமழை அதிகம் இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். வடகிழக்குப்பருவமழை எப்போது தொடங்கும் என்பதை இந்த வார இறுதியில் இந்திய வானிலை மையம் கணிக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்