வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (04/10/2017)

கடைசி தொடர்பு:15:28 (04/10/2017)

’அரியலூரில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது!’ - மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்

’அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

               


அரியலூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியா, ''மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மருத்துவத்துறை சார்பில் ஒன்றியத்துக்கு ஒரு குழு வீதம்  ஆறு தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கைள் எடுக்கப்பட்டுவருகின்றன. பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால், அங்கு சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, டெங்கு நோய் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அதற்கான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், தற்போது பள்ளிகள் திறந்துள்ளதாலும் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், டெங்கு நோயால் மாணவர்கள் பாதிக்காத வகையில், அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் நிலவேம்புக் கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

பொதுமக்கள், தாம் வாழும் இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முன்வர வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகள்மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது'' என மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியா தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று செந்துறையைச் சேர்ந்த ஒரு மாணவி டெங்குவால் உயிரிழந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம், அந்த மாணவி காய்ச்சலால் இறக்கவில்லை எனத் தகவல் அளித்தது. இதுவரை அரியலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கும் மேல் டெங்குவால் உயிரிழந்திருக்கிறார்கள்.