சசிகலா பரோலைத் தடுக்கிறதா தமிழக அரசு? - 'பரோல் மனு நிராகரிப்பு' பின்னணி தகவல்கள் | Is Tamil Nadu government preventing Sasikala parole?- 'Parole petition rejection' background information

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (04/10/2017)

கடைசி தொடர்பு:16:25 (04/10/2017)

சசிகலா பரோலைத் தடுக்கிறதா தமிழக அரசு? - 'பரோல் மனு நிராகரிப்பு' பின்னணி தகவல்கள்

சசிகலா

15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவின் மனுவைக் கர்நாடகச் சிறைத்துறை நிராகரித்துள்ளது டி.டி.வி.தினகரன் தரப்பைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சசிகலா தற்போது கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள அவர் கணவர் நடராஜன் சில நாள்களுக்கு முன்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, கணவர் நடராஜனைப் பார்த்துச் செல்வதற்காக, பரோல் அனுமதி கேட்டு கர்நாடகச் சிறைத்துறையில் விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதுகுறித்து ஆய்வு செய்த சிறைத்துறை, 'தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை' எனக்கூறி அவரது பரோல் மனுவை நிராகரித்துள்ளது. 

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், சசிகலாவின் தமிழக வரவை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு 'மனு நிராகரிப்பு' பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு எதிராகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிரடி காட்டிவரும் சூழலில், தமிழகத்துக்குச் சசிகலா வருகைதந்தால், அது பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு அடிகோலும் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 

இந்நிலையில், 'மனு நிராகரிப்பு' குறித்துப் பேசும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், ''சின்னம்மாவைப் பழி தீர்க்கும் வேகத்தோடு செயல்படுகிறது பி.ஜே.பி. ஆனால், காங்கிரஸ் கட்சியோ எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறது. அதனால், நிச்சயம் எங்கள் சின்னம்மா பரோலில் வெளியே வருவார். அப்போது அ.தி.மு.க-வில் உள்ள அமைச்சர் உள்ளிட்ட பெருந்தலைகள் அவரை நேரில் சந்திப்பார்கள். நிச்சயம் அரசியல் மாற்றங்கள் நிகழும்!

நடராஜன்

அதேசமயம், கர்நாடக சிறைத்துறை ஒப்புதல் அளித்தாலும்கூட தமிழக அரசும், இங்கே உள்ள காவல்துறையும் சின்னம்மாவின் பரோல் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவர் பரோலில் வெளிவர முடியும். ஆனால், சின்னம்மா தமிழகத்துக்குள் காலடி வைத்தால், தங்களுக்கு ஆதரவு அளித்துவரும் எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் மறுபடியும் சின்னம்மாவைச் சந்தித்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற பயத்தில் இருக்கிறது தமிழக அரசு. அதனால், கர்நாடக சிறைத்துறை ஒப்புதல் அளித்தாலும்கூட, 'சசிகலா தமிழகத்துக்குள் வந்தால், சட்டம் ஒழுங்கு கெடும்' என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி, பரோலுக்குத் தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு. அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது நாங்கள் நீதிமன்றம் வழியாக பரோல் அனுமதி பெற்றுவருவோம்'' என்று பரோல் விவகாரத்தில் அரசியலைப் பற்றவைத்தனர்.

சசிகலா பரோல் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து சட்ட நிபுணர்களிடம் பேசியபோது, ''சசிகலாவுக்கு நிச்சயம் பரோல் கிடைக்கும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில், அவர் ஒன்றும் கடுங்காவல் தண்டனைக் குற்றவாளி அல்ல. சிறைத்தண்டனை அனுபவித்து 6 மாதங்களைக் கடந்துவிட்டது. மேலும், அவரது உறவினர்கள் மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் மறைவுக்குக்கூட அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. மற்றபடி சிறையிலிருந்து முறைகேடாக அவர் ஷாப்பிங் சென்றுவந்தார் என்று வெளியான வீடியோவும்கூட சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள்தான். வேறு ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது சிறைத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, சிறை நன்னடத்தை விதிகளின்படி சூழ்நிலைகள் எல்லாம் சசிகலாவுக்குச் சாதகமாகவே உள்ளது. எனவே, நிச்சயம் பரோல் கிடைத்து அவர் வெளியே வருவார்'' என்று நம்பிக்கை தெரிவித்தவர்கள் மனு நிராகரிப்புக்கான பின்னணி குறித்தும் பேச ஆரம்பித்தனர்.

ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.

''சாதாரணமாக மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள்கூட சம்பந்தப்பட்ட மருத்துவரது கையெழுத்துடன்தான் 'மருத்துவ விடுப்பு'க்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பார். அப்படியிருக்கும்போது, சிறைத்தண்டனையில் இருக்கும் ஒருவர் பரோலில் வெளியே வரக் கோரும்போது, மருத்துவ ரிப்போர்ட்டுக்கான உறுதிச்சான்றினைக் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். ஆனால், நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்பதைச் சொல்லும் மெடிக்கல் ரிப்போர்ட்டினை சமர்ப்பித்தவர்கள், அந்த ரிப்போர்ட்டின் நம்பகத் தன்மையை உறுதிசெய்யும் ஆவணத்தைக்கூட இணைக்கவில்லை. இது சசிகலா தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு எவ்வளவு 'வீக்'காக உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது'' என்ற எச்சரிக்கையோடு பேசி முடித்தனர். 

இந்நிலையில், 'சசிகலாவுக்கு பரோல் வழங்க தமிழக அரசு அனுமதி அளிக்குமா?' என்ற கேள்விக்கு விடைகேட்டு சட்டம் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசினோம்....

''இதுவரையிலும் அதிகாரபூர்வமாக கர்நாடக சிறைத்துறையிடமிருந்து எந்தவிதக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை. பத்திரிகைச் செய்திகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியாது.'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


 


டிரெண்டிங் @ விகடன்