வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (04/10/2017)

கடைசி தொடர்பு:18:55 (04/10/2017)

லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 7 ஆண்டு சிறை -அரியலூர் நீதிமன்றம் அதிரடி!


லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், எழுத்தர் ஆகியோருக்கு 7 வருட சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது அரியலூர் நீதிமன்றம் 

              

   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக கோபாலன் மற்றும் எழுத்தராக காமராசன் பணியாற்றினார்கள். இந்நிலையில் கடந்த 2009 -ம் ஆண்டு உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் தனது தாய்க்கு நிலத்திற்கான பவர் பத்திரம் எழுதித்தர விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பவர் பத்திரம் குறித்து சார்பதிவாளர் கோபாலனிடம் கேட்ட போது பாரதியிடம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத பாரதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் செய்தார்.

                     

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸா ர் உத்தரவின் படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டை சார்பதிவாளரிடம் பாரதி கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் கோபாலனையும் இதற்கு உதவியாக இருந்த எழுத்தர் காமராசனையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையல் இவ்வழக்கின் குறித்த தீர்ப்பினை நீதிபதி ரவி இன்று வழங்கினார்.

            

அதில் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கோபாலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், எழுத்தர் காமராசனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்தியச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.