'நமக்கான சுயராஜ்ஜியம் எப்போது..?' - திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று | Today is Tiruppur kumaran's birthday

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (04/10/2017)

கடைசி தொடர்பு:20:22 (04/10/2017)

'நமக்கான சுயராஜ்ஜியம் எப்போது..?' - திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று

அடக்குமுறைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் ஒவ்வோர் இந்தியனுக்குமே முன்னோடி இந்தக் குமரன்... கொடிகாத்த குமரன்..!

 

4.1.1932-ம் ஆண்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த தருணம், ஆங்கிலேய அரசால், காந்தியடிகள் கைது செய்யப்பட்ட செய்தி நாடெங்கும் காட்டுத் தீயாக பரவிக்கொண்டிருந்தது. நாடு முழுக்கப் பரவிக்கிடந்த மகாத்மா காந்தியின் தொண்டர்கள் பலரும் ஒன்றுகூடி, ஆங்கிலேய அரசை எதிர்த்து ஆங்காங்கே கண்டனப் போராட்டம் நடத்தவும் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்தார்கள். அதன்படி காவல்துறையின் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மீறி 1932-ம் வருடம் ஜனவரி 10-ம் தேதி, திருப்பூரில் தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் கண்டன ஊர்வலம் தொடங்கியது.

எங்கெங்கோயிருந்துக் கிளம்பி வந்த பலநூறு இளைஞர்கள், அந்நிய அரசுக்கு எதிரான அந்த ஊர்வலத்தில் தங்களை இணைத்துக்கொள்ள, காந்தியடிகளின் மீது கொண்ட தீராப் பற்றால், நெசவாளர் குமாரசாமியும் அந்த ஊர்வலத்தில் முதல் ஆளாகக் கலந்துகொண்டிருந்தார்.

 

தேசியக் கொடியைக் கையில் ஏந்தியவாறு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சுதந்திர வேட்கையுடன் வீர முழக்கமிட்டுக்கொண்டே ஊர்வலத்தில் முதல் வரிசையில் சென்றுகொண்டிருந்தார் குமாரசாமி. ஊர்வலம் தொடங்கி சில நிமிடங்களே கடந்திருந்தது. குமாரசாமி உட்பட பலரையும் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கத்தொடங்கினார்கள் ஆங்கிலேய காவல்துறையினர். ராமன் நாயர், நாச்சிமுத்து கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்து செட்டியார், சுப்புராயன் மற்றும் மாணவர்கள் அப்புக்குட்டி, நாராயணன் என அனைவரும் போலீஸாரின் காட்டுமிராண்டித் தனத்தில் சிக்கி அடிபட்டு, மிதிபட்டு துடித்தார்கள்.

குமாரசாமியின் தலையை லத்தியால் குறிவைத்து பலமாக அடித்துத் துவைத்தனர் காவல்துறை சிப்பாய்கள்.  உயிர்போகும் வலியில் குமாரசாமி துடித்தாலும், தன் கையிலிருந்த தேசியக் கொடியை மட்டும் கீழே விட்டுவிடாமல், "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பிய வண்ணமிருந்தார். அப்போதும் ஆங்கிலேய காவல்துறை தன் தாக்குதலை நிறுத்திவிடவில்லை. மண்டை பிளந்து ரத்தம் கொட்டிய தருணத்திலும், குமரனின் கைவிரல்கள் இருக்கமாகப் பிடித்திருந்த தேசியக் கொடியைப் பிரிக்க முடியாமல் திணறினார்கள் காவல்துறை சிப்பாய்கள். ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்துவிட்ட அந்தக் கலவரம் ஒருவழியாக ஓய்ந்து முடிந்ததும், அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரசாமியையும் மற்றவர்களையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் போராளிகள்.

 

 

அங்கே குமாரசாமியும் ராமன் நாயரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். மருத்துவமனையில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்திலும், "நமக்கு சுயராஜ்ஜியம் கிடைக்காதா?" என்ற கேள்வியைத்தான் இறுதியாக முன்வைத்தார் குமாரசாமி. அதற்கு அடுத்த தினமான 1932, ஜனவரி 11-ம் தேதி ராமன் நாயர் மட்டும் கண் விழிக்க, குமாரசாமியோ இந்தியத் திருநாட்டின் கொடியைக் காத்த குமரனாய் இம்மண்ணை விட்டு மறைந்துபோனார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வசித்த, சாதாரண நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. குடும்பத்தில் நிலவிய வறுமை இவரைக் கல்வி கற்கவும் விடவில்லை. வறுமையின் பிடி, இவரைக் குடும்பத்துடன் பிழைப்பு தேடி திருப்பூருக்கும் இடம்பெயர வைத்தது. வீட்டின் மூத்த பிள்ளையான குமாரசாமிக்கு 19 வயதிலேயே திருமணமும் நடந்தாயிற்று. குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஒட்டுமொத்தமாகத் தன் தோளில் சுமக்க வேண்டிய குமரன், இந்நாட்டின் விடுதலைக்காகக் களத்தில் இறங்கி, திருப்பூர் வீதியிலே குருதி வெள்ளத்தில் மாண்டுபோனது இந்திய வரலாற்றில் அழிக்க முடியாததொரு போராட்ட நிகழ்வு.

 

இன்று இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்று எத்தனை வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்றும் நம் நாட்டுத் தெருக்களில் நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இன்று நம்மை ஆளும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக உரிமைப் போராட்டம் நடத்தி, குண்டர் சட்டத்திலும் பல்வேறு அடக்குமுறைகளிலும் மிதிபட்டுக்கொண்டிருக்கும் இன்றைய
குமரன்கள் அனைவருக்குமே அந்தத் திருப்பூர் குமரன்தான் மூத்த முன்னோடி.