வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (04/10/2017)

கடைசி தொடர்பு:18:20 (09/07/2018)

'கலாம் யாத்திரா' அறிவியல் விழிப்பு உணர்வு பிரசாரப் பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கியது

இந்திய உலக அறிவியல் தினவிழாவை முன்னிட்டு கலாம் அறிவியல் விழிப்பு உணர்வு பயணம் இன்று ராமேஸ்வரத்தில் தொடங்கியது.
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய உலக அறிவியல் விழா குழுவின் சார்பில் சென்னையில் வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 'இந்திய உலக அறிவியல் தினவிழா ' நடைபெற உள்ளது. 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி சென்னை  பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

கலாம் யாத்திரா அறிவியல் விழிப்புணர்வு பயணம் 

 இந்த நிகழ்வை பிரபலப்படுத்தும் வகையிலும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அறிவியல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், கிராம மக்கள், விவசாயிகளுக்கு அணுக்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க 'கலாம் யாத்திரா' என்ற பிரசாரப் பயணம் இன்று ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கியது.

ராமேஸ்வரம் டாக்டர் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தின் முன்பிருந்து தொடங்கிய இந்தப் பயணத்தை கலாமின் பேரன் சலீம் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார். ராமேஸ்வரத்திலிருந்து இந்த விழிப்புஉணர்வு பயணம் திருச்செந்தூர், நாகர்கோயில், தூத்துக்குடி, மதுரை வழியாக சென்னையை வரும் 12-ம் தேதி சென்றடைய உள்ளது. இதேபோல் ஊட்டி மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களிலிருந்தும் இந்தப் பிரசாரப் பயணம் சென்னைக்குச் செல்கிறது. 

ராமேஸ்வரத்தில் தொடங்கிய அறிவியல் பிரசார பயண நிகழ்வில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வெங்கட்ராமன், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்பு உணர்வுப் பிரிவு தலைவர் ஜலஜா மதன்மோகன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.