Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கொத்தடிமையைவிட கொடுமையாக இருக்கிறது!’ - கலெக்டரிடம் கதறிய பெண் தொழிலாளி

தறி ஓட்டும் தொழிலாளியை, 'கொத்தடிமையாக வேலை செய்' என்று பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறியதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

கோவை


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் மனைவி மீனாட்சி. இவர்கள் இருவரும் கருமத்தம்பட்டியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மீனாட்சி அளித்துள்ள மனுவில், "நானும் என் கணவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக கருமத்தம்பட்டி, பாரதி நகர் தெருவில் உள்ள ஶ்ரீராம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், தறி ஓட்டும் தொழிலாளிகளாகப் பணிபுரிந்து வருகிறோம். இதனிடையே, எங்களது நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன் பணமாக வாங்கியிருந்தோம். அதைச் சரியாகத்தான் வழங்கி வந்தோம்.

இந்நிலையில், சில காரணங்களால் நாங்கள் வேறு நிறுவனத்தில் பணியில் சேர முடிவுசெய்தோம். இதை அறிந்த எங்கள் உரிமையாளர் எங்களைக் கொடுமை செய்ய ஆரம்பித்தார். நாங்கள் பணம் கொடுக்கிறோம் என்று கூறியபோதும், உடனடியாகப் பணம் கொடுக்கக் கூறி எங்களைத் தொந்தரவு செய்து வருகிறார். எங்கள் வீட்டின் மின் இணைப்பை நிறுத்தினார். இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, என்னை அடித்து கொடுமை செய்கிறார். நான்கு நாள்களாக எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. இரண்டு வாரங்களாக எங்களுக்குச் சம்பளம் தரவில்லை. கேட்டால், 'உடனடியாக மீதிப் பணத்தைக் கொடு, இல்லாவிட்டால் கொத்தடிமையாய் வேலை செய்' என்று மிரட்டுகிறார்.

இது தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. காவல்துறையும் அவர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement