நடிகர் செந்தில் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை நீட்டிப்பு!

அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நடிகர் செந்தில், சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த திருச்சி எம்.பி குமாரைக் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குமார், திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அருணிடம் புகார் அளித்தார்.

அதில், டி.டி.வி.தினகரன் தூண்டுதல் பெயரில் நடிகர் செந்தில், தன்னை மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. தினகரனையும் நடிகர் செந்திலையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டிவந்தது.

இதனிடையே வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் நடிகர் செந்தில் தரப்பில் சில வாதங்கள் வைக்கப்பட்டு கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று (அக்டோபர் 4) வரை கைதுசெய்ய இடைக்காலத் தடையை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!