வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (04/10/2017)

கடைசி தொடர்பு:20:50 (04/10/2017)

 ஹெல்மெட் போடாமல் பால் லாரி ஓட்டுவதா? - அபராதம் விதித்த போலீஸ் அதிகாரி!

ஹெல்மெட் போடாமல் பால் லாரியை ஓட்டி வந்ததாக 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர், சென்னைப் போக்குவரத்துப் போலீஸார்.

போலீஸாரிடம் அபராதம் செலுத்தியவர்கள் ஓட்டிவந்ததோ மோட்டார் சைக்கிள். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவராக இருக்கும் சு.ஆ.பொன்னுசாமிதான் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர். இதுகுறித்து பொன்னுசாமியிடமே கேட்டேன்.  "எங்கள் சங்க நிர்வாகி பொன்மாரியப்பனுடன் மோட்டார் சைக்கிளில் அண்ணா சாலை வழியாக வந்துகொண்டிருந்தேன். வரும் வழியில், தேநீர் அருந்தினோம். அப்போது, தலையில் அதிகமாக வியர்வை வழிந்த காரணத்தால், ஹெல்மெட்டைப் பின்னால் இருந்த மாரியப்பனிடம் கொடுத்துவிட்டு வண்டியை நான் ஓட்டத் தொடங்கினேன்.
ஹெல்மெட் போடாமல் லாரி ஓட்டிய (?) பொன்னுசாமி

அண்ணா மேம்பாலம் கீழே உத்தமர் காந்தி சாலை சந்திப்பில் வந்தபோது போக்குவரத்துப் போலீஸார், வாகனங்களை மடக்கி ஆய்வு செய்தனர். எங்களிடம் வாகனப் பதிவு புத்தகம், வாகனக் காப்பீடு, அசல் ஓட்டுநர் உரிமம் என அனைத்தும் இருந்தது. 'ஹெல்மெட் அணியவில்லை' என்ற குற்றத்துக்காகப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் எம்.சேகர், 100 ரூபாய் அபராதம் செலுத்தச் சொன்னார். மற்ற வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் 1,500 ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் அவர்களிடம் 200 ரூபாயை வாங்கிக்கொண்டு அதற்கான எந்த ரசீதும் வழங்காமல் வாகனத்தை விடுவித்தனர்.

அடுத்து, உதவி ஆய்வாளர் சேகர் எங்களிடம் வந்தார். 'நாங்கள் சற்று முன்தான் தலைக்கவசத்தைக் கழற்றினோம்' என்றதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 100 ரூபாயை அங்கேயே அபராதம் கட்டி  ரசீதை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டோம். அலுவலகத்துக்கு வந்த பின்னர், அந்த ரசீதை எடுத்துப் பார்த்தோம். அதில் நாங்கள் ஓட்டி வந்தது MILK LORRY என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாகன ஓட்டுநர் உரிமம் எண். 000000000000 என்று மொத்தம் 12  பூஜ்யங்கள் இருந்தன. தலைக்கவசம் இல்லாததற்கு அபராதம் என்பதை மட்டும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளனர். அபராதம் எங்கு விதிக்கப்பட்டது என்ற விவரம் அந்த 'பில்'லில் இல்லை. மோட்டார் சைக்கிளைப் பிடித்துவிட்டு, ஹெல்மெட் போடாமல் பால் லாரியை ஓட்டி வந்ததாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர். பால் லாரி ஓட்ட ஹெல்மெட் போட வேண்டும் என்ற விதிமுறையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்" என்றார்.