வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/10/2017)

கடைசி தொடர்பு:08:39 (05/10/2017)

’சேலத்தில் டெங்குவை தேசியப் பேரிடராகக் கருதி இந்திய ராணுவம் வர வேண்டும்’

சேலம் மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் கை நழுவிப் போய்விட்டது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை போர்க்களக் காட்சியாக எங்கு பார்த்தாலும் அழுகையும், கூக்குரலுமாக இருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மருத்துவமனை நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதால் ஊழியர்களும் செய்வதறியாது திகைத்து தங்கள் பணிகளை நிறுத்திக்கொண்டார்கள்.

அதனால் மக்களே காய்ச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் குளுக்கோஸ் போடுவது முதல் கழற்றுவது வரை அவர்களே செய்துகொள்கிறார்கள். சேலம் மாநகரத்தைவிட்டு வெளியிலிருந்து வருபவர்களை எதற்காக இங்கு வந்தீர்கள் என்று திட்டுகிறார்கள். இன்று காலையிலிருந்து பிற்பகல் 1 மணி வரை 4 குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலம் ஓமலூர் குட்டப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ராஜாவின் மகள் சிவானி வயது 7. கடந்த ஒரு வாரமாக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை மரணமடைந்தார்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த சீனிவாசன் மகள் பிரியா, வயது 15. தொடர் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணனின் மகள் லத்திகா, வயது 7. கடந்த 29-ம் தேதி காய்ச்சலால் சேலம் அரசு மோகன் குமாரங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலை மரணமடைந்தார்.
சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த செல்வி மகன் பூபதி என்கின்ற சந்தோஷ் வயது 6. இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.

இதுபற்றி பூபதியின் தாய் செல்வி, ''என் குழந்தையின் பெயர் பூபதி என்கின்ற சந்தோஷ். நான் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் குடியிருக்கிறேன். குழந்தை பிறந்ததும் என் கணவன் கோவிந்தன் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இந்தக் குழந்தைதான் உலகம் என்று வளர்த்து வந்தேன். கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் இருந்ததால் இந்த மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்ந்தேன். விடியற்காலை 4 மணிக்கே இறந்து விட்டதாகச் சொல்லிட்டாங்க. கேட்டால் மூளை, கிட்னி, இதயம் பாதித்துவிட்டது. இன்னும் 10 % உயிர் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. என் குழந்தையின் சடலத்தை வாங்கித் தாருங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்கிறேன்'' என்று தலை தலையாக அடித்துக்கொண்டு அழுதார்.

இதுபற்றி அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, ''மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது மர்மக் காய்ச்சலில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 582. இதில் பெரியவர்கள் 312. குழந்தைகள் 270. இதில் டெங்கு அறிகுறி உள்ளவர்கள் 150. தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்'' என்றார்.

இதுபற்றி பிஸ்மில்லா மக்கள் கட்சியின் தலைவர் அகமது ஷாஜஹான், ''சேலத்தில் டெங்குக் காய்ச்சலால் கொத்துக்கொத்தாகக் குழந்தைகளும், முதியவர்களும் இறந்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் செயலிழந்துவிட்டது. சேலம் மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவித்து ராணுவத்தை அழைத்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளை நோயான டெங்குவை ஒழிக்க வேண்டும். இதில் மாநில அரசு ஈகோ பார்க்காமல் மத்திய அரசிடம் பேசி உடனே ராணுவத்தை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.