பக்தர்களே சீரமைக்கும் குடைவரைக் கோயில் தெப்பக் குளம்! | Nellai Murugan temple is cleaning by devotees in second day

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (05/10/2017)

கடைசி தொடர்பு:07:37 (05/10/2017)

பக்தர்களே சீரமைக்கும் குடைவரைக் கோயில் தெப்பக் குளம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள முருகன் கோயிலின் தெப்பக் குளத்தை பக்தர்களே சீரமைத்து பராமரிப்புச் செய்யும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். 

கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. நெல்லை, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இந்தக் கோயில், குடைவரைக் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதன் கீழ்ப்புறவாசலில் தெப்பக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் தற்போது தண்ணீர் வற்றிய நிலையில் அதன் அடிப்பகுதியில் குப்பைகளும் கழிவுகளுமாகக் கிடந்தன.

இந்தத் தெப்பக் குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பக்தர்கள் முன்வைத்தனர். அதைத்தொடர்ந்து, பக்தர்களே ஒருங்கிணைந்து கடந்த இரு தினங்களாக தெப்பக்குளத்தைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளைக் கோயிலின் அர்ச்சகரான கணேசப் பட்டர் ஒருங்கிணைத்து வருகிறார். முருக பக்தர்கள், வேலாண்டித் தம்பிரான் பக்தர்கள், பரதேசி சுவாமிகள் பக்தர்கள் சார்பாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுத்தப்படுத்தும் பணி

இதுகுறித்து கணேசப் பட்டரிடம் பேசியபோது, ’’இந்தக் குடைவரைக் கோயில் மிகவும் சிறப்பு மிக்கது. இந்தக் கோயிலை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். தேவேந்திரன் வழிபட்ட இந்தக் கோயில் அமைந்துள்ள இடமானது, தாரகனை வதம் செய்த இடமாகும். முருகனுடன் தெய்வானை இருக்கும் திருப்பரங்குன்றம் போல, இந்தத் தலத்தில் முருகனுடன் வள்ளி இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. 

இந்தக் கோயிலின் தெப்பக் குளத்தைக் கடந்த இரு தினங்களாகச் சுத்தம் செய்துவருகிறோம். இரு ஜே.சி.பி மற்றும் 6 டிராக்டர்கள் மூலமாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களும் வணிகர்களும் இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதால் இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தெப்பக்குளத்தை முழுமையாகச் சீரமைக்கும் வரையிலும் இந்தப் பணிகள் நடைபெறும்’’ என்றார். 


[X] Close

[X] Close