வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/10/2017)

கடைசி தொடர்பு:16:44 (13/07/2018)

’காளையும், ஆடும் ஆற்றைக் கடந்த கதை’ - கரூர் விழாவில் முதலமைச்சர் சொன்ன ஒப்பீடு!

கரூரில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய முதல்வர் தொடங்கி, கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரை டி.டி.வி.தினகரன் அணியில் ஆக்டிவாக இருக்கும் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியைக் காய்ச்சி எடுத்தனர். உச்சகட்டமாக டி.டி..வி.தினகரன் பற்றியும், அவரது ஆதரவாளர்களான செந்தில்பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களைப் பற்றியும் விளக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக் கதை இதுதான்

 

 

’இன்னைக்கு இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம், கட்சியைக் கலைச்சுவிடலாம்ன்னு, எதிர்க்கட்சிகளைவிட நம்ம கட்சியிலேயே இருந்த ஒரு குரூப்தான் இப்போ கங்கணம் கட்டிக்கிட்டு செயல்படுது. ஆனால், நாம் யாருக்கும் அஞ்சமாட்டோம். இந்த ஆட்சியும் கலையாது. கட்சியும் உடையாது. அம்மாவின் கனவு தொடரும். ஆனால், ஏதோவோர் ஆசையில் சிலர் விரித்த வலையில் விழுந்து இருக்கிறார்கள் சில எம்.எல்.ஏ-க்கள். நம் பலம் புரிந்து, யார் பின்னே போனோமோ அவர்களின் நயவஞ்சகம் உணர்ந்து என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறார்கள். இதை ஒரு குட்டிக் கதை வாயிலாக உங்களுக்கு விளக்குகிறேன். 


 

ஓர் ஆற்றில் கடும் வெள்ளம். ஒரு கரையில் இரு மனிதர்கள் நிற்கிறார்கள். இருவரும் அக்கரை செல்ல வேண்டும். ஆனால், அந்த வெள்ளத்தில் மறுகரை பத்திரமாகச் சென்று சேர்வது முடியாத காரியமாக அவர்களுக்குத் தெரிகிறது. அப்போது, ஒரு காளை மாடு தண்ணீரில் குதித்து அந்தக் கரைக்குப் போக முயல்கிறது. இரண்டு நபர்களில் ஒரு ஆள் சமயோசிதமாக யோசித்து, அந்தக் காளையின் வாலைப் பிடித்து, பத்திரமாக அக்கரை சேர்கிறார். இன்னொரு நபர், 'நாம அப்படி யோசிக்கலையே' என்று வருத்தப்படுகிறார். அப்போது, ஓர்  ஆடு ஆற்று வெள்ளத்தில் குதித்து அந்தக் கரைபோக முயற்சி செய்கிறது. உடனே, அந்த மற்றொரு ஆள் அந்த ஆட்டின் வாலைப் பிடித்து மறுகரை சேர முயல்கிறார். ஆனால், அந்த ஆளின் கணம் தாங்காமல் அந்த ஆடு தண்ணீரில் மூழ்க, அந்த ஆட்டோடு சேர்ந்து அந்த ஆளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார். இப்படித்தான் சிலர் எது சரியான திசை, துல்லியமான வழி, கரை சேர்க்கும் பாதுகாப்பான இடம் என்று தெரியாமல் சிலரிடம் மாட்டி முழிக்கிறார்கள். அந்த ஆட்டைப் பிடித்த மனிதனைப் போல் தத்தளிக்கிறார்கள். ஆனால், காளை மாட்டைப் பிடித்து போனவர்கள்தான் நாம் எல்லோரும்’ என்றார்.