"செந்தில்பாலாஜி எட்டப்பன். நான் ஊமைத்துரை" -பொளந்து கட்டிய போக்குவரத்துத்துறை அமைச்சர்

"அ.தி.மு.க-வைக் காட்டிக் கொடுத்து குப்புறத் தள்ள நினைக்கும் எட்டப்பன்கள் எதிரணியில் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையான எட்டப்பன் செந்தில்பாலாஜி. அந்த எட்டப்பன்களிடமிருந்து இந்த ஆட்சியையும், கட்சியையும் ஊமைத்துரையாக உங்கள் பின்னே இருந்து காப்பாற்றுவோம்" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசமாகப் பேசினார்.
கரூர் திருமாநிலையூரில் இன்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சித் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 


அந்த விழாவில், முன்னிலை உரை ஆற்றிய தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கட்சியைக் காட்டிக் கொடுத்த, கட்சியை வீழ்த்த நினைத்த செந்தில்பாலாஜியின் கதி இன்று என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, என்னைப் பற்றியும், ஓ.பி.எஸ் அண்ணன் பற்றியும் அம்மாவிடம் தவறாகச் சொல்லி, அம்மாவையே ஏமாற்றி அடுத்த முதலமைச்சர் ஆகப் பார்த்தவர். அதனால், என் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனது.


 

இருந்தாலும், நானும், ஓ.பி.எஸ் அண்ணனும்,நாங்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள் மற்றும் செந்தில்பாலாஜி எத்தகைய ஆள் என்பதைப் பற்றியும் தெரிவித்தோம். அதனால்,மறுபடியும் எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. கரூர் தொகுதியில் கடந்த தேர்தலில் சீட் கிடைத்தது. அதில் ஜெயித்த எனக்குப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால், தனக்குப் பதவி கிடைக்கலைன்னதும், எங்களை மட்டுமல்ல, கட்சியையே காலி பண்ண பார்த்தார் அவர். அதனோட, பலனைத்தான் இன்னைக்கு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற வீழ்ச்சிப் பலனை அடைந்திருக்கிறார். அம்மா இன்னும் நூறு ஆண்டுகள் இந்தக் கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஆசைப்பட்டார்கள். ஆனால், செந்தில்பாலாஜி போன்ற எட்டப்பன்கள் கட்சியைச் சீரழிக்க முயல்கிறார்கள். ஆனால், ஊமைத்துரைகளாக நாங்கள் முதல்வர் பின்னே இருந்து ஆட்சியும், கட்சியும் தொடர உறுதுணையாக இருப்போம்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!