தூத்துக்குடியில் தொல்லியல் ஆய்வில் நாயக்கர்கள் கால சதிகற்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரநல்லூர் கிராமத்தில் நாயக்கர் காலத்துச் சதிகற்களைத் தொல்லியர் ஆய்வாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

nayakar periodic sathikal

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள குலசேகரநல்லூர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் முனைவர் பிரியா கிருஷ்ணன் மற்றும் தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோர் ஆய்வின்போது நாயக்கர் காலத்து சதிகற்களைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பேசிய தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரியா கிருஷ்ணன், ‘சதிகல்’ எனப்படுவது போரில் கணவர் வீரமரணம் அடைந்த பிறகு மனைவி தீய்க்குள் பாய்ந்து உடன்கட்டை ஏறுவதைக் குறிக்கிறது. மன்னர்களைப் பற்றி தெரிந்துகொள்ள கல்வெட்டுகள் இருந்ததைப் போல வீரர்களைப் பற்றி அறிய உதவுவது இந்த மாதிரியான நடுகற்கள்தான். நடுகற்களில் பலவகை இருந்தாலும், சதிகல் என்பது பெண்களின் வீரம், கற்புடைமையைப் பற்றி அன்றைய நிலையை எடுத்துக்காட்டுவது போலாகும். 

prof.priyaஇந்தக் குலசேகரநல்லூர் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டபோது  கி.பி 18 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்து சதிகற்களைக் கண்டுபிடித்தோம். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த பலரில், இருவருக்காக இந்தச் சதிகற்கள் வணங்கப்பட்டு வருவதாக இக்கிராம மக்கள் சொல்கின்றனர். இரண்டு சதிக்கற்களுமே கணவன் மனைவியின் நேர்த்தியான கலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சதிகற்களில் செதுக்கப்பட்ட சிற்பத்தில் கணவன்கள்  இருவரும் தன் இரண்டு கைகளிலும் குறுவாளும் வைத்தும், காலில் வீரகழல் அணிந்துள்ளனர். இரு மனைவி சிற்பங்களில் காது, கை, இடை, கால்களில் அணிகலன்கள் அணிந்து கையில் அல்லி மலரைப் பிடித்தது போல உள்ளது. 

இரு சிற்பத்தின் கீழ் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட குதிரை சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. வீரனின் கையில் உள்ள குறுவாள் கீழ்நோக்கிக் காணப்படும் குறுவாளும், கணவன் மனைவியாக உள்ளதாலும் இது சதிகல் என்பதை உறுதிபடுத்துகிறது. இக்கற்கள் மழை, வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காக மேற்கூரை சற்று வெளியே நீட்டியபடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே சின்னச் சின்னதாக நிறைய கற்கள் நடப்பட்டிருந்தன. போரில் இறந்த வீரர்களின் நினைவாக நடப்பட்டது என ஊர்மக்கள் கூறினார்கள். இப்பகுதியில் தொடர்ந்து நடக்கவிருக்கும் தொல்லியல் ஆய்வுகளால் பல வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த சிற்பங்களை அடையாளம் கண்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!