’ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவுத் தபால், மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்’

ஜி.எஸ்.டி-க்கு எதிராக மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிவுத் தபால் மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று காட்மா சங்கம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டக் குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் (காட்மா) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், கோவை சங்கனூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் சிவக்குமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் ‘இன்ஜினீயரிங் சம்பந்தமான உதிரிப்பாகங்களை ஜாப் ஒர்க் அடிப்படையில், பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்று இயங்குகின்ற குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசே அறிவித்துள்ள ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட குறு நிறுவனங்களுக்கு, ஜாப் ஆர்டர் தர முடியாது என்று பெறு நிறுவனங்கள் மறுக்கின்றன. இதனால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களில், கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனங்களை ஈர்க்கும் வகையில், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கு வருகின்ற செவ்வாய்கிழமை (10-ம் தேதி) முதல் பதிவுத் தபால் மற்றும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக காட்மா சங்கம் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!