உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் வேளாண் அலுவலர் தற்கொலை: அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக வேளாண் அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக நெல்லை வேளாண் அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிகாரி தற்கொலை ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டம், குருந்தன்கோடு வட்டார உதவி வேளாண்மை அலுவலராகப் பணியாற்றியவர், அமுதன். இவருக்கு உயர் அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். அவர்கள் செய்யச் சொன்ன தவறான பணிகளுக்கு அமுதன் அசைந்து கொடுக்க மறுத்ததால் உயரதிகாரிகளின் நெருக்கடி தீவிரம் அடைந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அமுதன் கடந்த மாதம் 27-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 

இந்தச் சம்பவம் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே நெல்லையைச் சேர்ந்த வேளாண் பொறியாளரான முத்துக்குமாரசாமி அரசியல்வாதிகள் கொடுத்த நெருக்கடியால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது நடந்த இந்தச் சம்பவம் வேளாண்மைத்துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் கொந்தளிப்பு அடையச் செய்தது.

 

கண்டன ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இன்று வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாலையில் திரண்டனர். பின்னர், அவர்கள் அதிகாரி அமுதன் மரணத்துக்குக் காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர். அவரது மனைவிக்கு வேளாண்மைத் துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான பார்த்தசாரதி, வேளாண்மை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ரகுபதி, ஹென்றி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தங்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் இந்தக் கண்டனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!