வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (05/10/2017)

கடைசி தொடர்பு:17:04 (23/07/2018)

டெங்கு காய்ச்சல் ஒழிப்பில் 'சமூக வலைத்தள சங்கம்'!

 

கரூர் மாவட்டத்தில் உள்ள சமூக வலைத்தள சங்கத்தினர் டெங்கு காய்ச்சலை ஒழிக்க பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கினர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கும் இளைஞர்களை இணைத்து, சமூக வலைத்தள சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்மூலமாக, பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு நற்பணிகளை செய்துவருகிறார்கள். ஒருகாலத்தில் பள்ளப்பட்டி மக்கள் குடிக்கப் பயன்படுத்தி வந்த பொதுக்கிணறு ஒன்று தூர்ந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்க, அதை தூர்வார இந்த சங்கத்தைச் சேர்ந்வர்கள் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து அதை, கரூர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து தூர் வாரச் செய்தார்கள். அடுத்த பாய்ச்சலாக இப்போது தமிழ்நாட்டையே பயமுறுத்தும் டெங்கு காய்ச்சலை பள்ளப்பட்டி பகுதியில் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறார்கள்.


 

பள்ளப்பட்டியில் உள்ள இந்த சமூக வலைத்தள அமைப்பான பள்ளப்பட்டி மக்கள் சமூக வலைத்தள சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயத்தை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் விநியோகித்தனர். பள்ளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 இடங்களில் நின்றபடி, அந்த வழியாக கடந்து போகும் மக்களை நிறுத்தி அவர்களை நிலவேம்புக் கசாயத்தை அருந்தச் செய்தனர். இதன்மூலம் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் நிலவேம்புக் கசாயம் பருகிச் சென்றனர். இந்த சங்கத்தைச்  சேர்ந்தவர்கள், "டெங்கு காய்ச்சலை பள்ளப்பட்டி பேரூராட்சியில் முற்றிலும் ஒழிக்கும்விதமாக அடுத்ததாக இங்குள்ள கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க இருக்கிறோம்" என்றார்கள்.