டெங்கு தடுப்புக்காக கஷாயம் காய்ச்சிக் குடித்தவர் பலி: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி | Home made medicine produced and drunk by a family got fatal

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (05/10/2017)

கடைசி தொடர்பு:10:41 (05/10/2017)

டெங்கு தடுப்புக்காக கஷாயம் காய்ச்சிக் குடித்தவர் பலி: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக கசாயம் காய்ச்சிக் குடித்த ஒருவர் பலியானார். 3 பேர் அபாய நிலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

கசாயம்நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளது. கிராமப் பகுதிகளில் பரவும் நோயின் தீவிரம் காரணமாக, பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாக, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அட்மிட் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தினந்தோறும் காய்ச்சல் காரணமாக  ஏராளமானோர் வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.

டெங்கு நோயின் தீவிரத்திலிருந்து பாதுகாக்க, பொதுமக்கள் தம் வீடுகளில் கஷாயம் தயாரித்துக் குடித்துவருகின்றனர். அரசு சித்த மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டுவருகிறது. நோயின் பாதிப்பிலிருந்து தப்புவதற்காக, இலவசமாக விநியோகிக்கப்படும் இந்தக் கஷாயத்தைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் குடித்துவருகின்றனர். இது தவிர, நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான பொடியை அரசு சித்த மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. 

அத்துடன், தனியார் மருந்துக் கடைகளிலும் நிலவேம்புக் கஷாயம் தொடர்பான பொடிகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தியும் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே கஷாயம் தயாரித்துக் குடிக்கின்றனர். ஒரு சிலர், தூதுவளை, பப்பாளி, அருகம்புல், சுக்கு உள்ளிட்ட பொருள்களைத் போட்டுக் காய்ச்சிக் கஷாயம் செய்து குடிக்கிறார்கள். நெல்லை மாவட்டம், ஊத்துமலைப் பகுதியைச் சேர்ந்த ஆபிரஹாம் பாண்டியன் என்பவர், தனது வீட்டில் இதேபோல கஷாயம் தயாரித்து குடும்பத்துடன் குடித்துள்ளார். 

டெங்கு ஆபிரஹாம் பாண்டியன், அவரது மருமகள் செல்வராணி, பேத்திகள் 5 வயது ஞானராணி, இரண்டரை வயதுள்ள ஜெயசீலா ஆகியோர் கஷாயத்தைக் குடித்துள்ளனர். அந்த மருந்தில் அவர்கள் சேர்த்த பொருள் ஒவ்வாமை ஏற்படுத்தியதால், நால்வருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கஷாயம் குடித்த ஆபிரஹாம் பாண்டியன் திடீரென மயங்கிவிழுந்து பலியானார். அவரது மருமகள் மற்றும் பேத்திகள் உள்ளிட்ட மூவரும் ஆபத்தான நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கஷாயத்தில் சேர்க்கப்பட்ட பொருள்கள் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டெங்கு நோய் தடுப்புக்காக கஷாயம் குடித்த குடும்பத்தினர் சிக்கலில் மாட்டிய விவகாரம் கிராமப் பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.