''திருப்பூர் குமரன் மீது சிறுமிக்கு இருந்த அக்கறைகூட முதலமைச்சருக்கு இல்லையா?"- வெடிக்கும் சமூக ஆர்வலர்கள்!


 

"கரூரில், கோடிகளை  செலவழிச்சு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடினது சரி. ஆனால், திருப்பூர் குமரனின் 114-வது பிறந்தநாளும் அக்டோபர் 4-ம் தேதிதான். முதலமைச்சர் தொடங்கி அத்தனை அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் கரூரில்தான் முகாமிட்டிருந்தாங்க. ஆனால்,கரூர் காவல்நிலையத்துக்கு  பக்கத்துல உள்ள திருப்பூர் குமரன் சிலை மீது, ஐந்து வயது சிறுமிக்கு இருந்த அக்கறைகூட முதல்வர் தொடங்கி எம்.எல்.ஏ-க்கள் வரை யாருக்கும் இல்லை" என்று வெடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 என்ன நடந்தது? விசாரித்தோம்: நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ''இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து கைப்பற்றி, சுதந்திரம் பெற தனது உயிரையே இழந்தவர்களில் முக்கியமானவர், திருப்பூர் குமரன். அவரது பிறந்தநாள் அக்டோபர் 4-ம் தேதி. அவர், கொங்கு மாவட்டமான திருப்பூரைச் சேர்ந்தவர் என்பதால், மற்ற மாவட்டங்களைவிட திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர்னு அவர் சிலை உள்ள கொங்கு மாவட்டங்களில், அனைத்துக் கட்சித்  தலைவர்களும் மாலை அணிவித்து அவரது பிறந்தநாளில் மரியாதைசெய்வார்கள். ஆனால் இந்த வருடம், முதல்வரை வைத்து கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் படாடோபமாக நடத்தினார்கள் அ.தி.மு.க-வினர். கரூர் நகரத்தையே ஃப்ளக்ஸ், பேனர்களால் அதகளப்படுத்தினார்கள். திருப்பூர் குமரன் சிலை உள்ள கரூர் நகர காவல்நிலையப் பகுதிகளில்தான் பல அமைச்சர்கள் தங்கி இருந்தார்கள். லோக்கல் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூர் தொகுதி எம்.பி-யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை உள்ளிட்டவர்களும் அந்த வழியாகத்தான் சென்று வந்தார்கள். அவர்கள், முதல்வரை மேடைக்கு அழைத்துச்செல்வதற்கு முன், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வைத்திருக்கலாம். இல்லையென்றால், அவர்களேகூட கட்சிக்காரர்களை விட்டு மரியாதை செய்யச் சொல்லியிருக்கலாம். ஒன்றும் செய்யவில்லை. 

மற்ற கட்சியினரும் அ.தி.மு.க-வினர் கொடுத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அலப்பறையில் வெக்ஸாகி, திருப்பூர் குமரன் சிலையைச் சீண்டவில்லை. மதியம் வரை யாரும் வரவில்லை. அதன்பிறகுதான் தெரிந்தது, யாரும் இனி வரமாட்டார்கள் என்று. அந்தச் சிலையைக்கூட யாரும் சுத்தம் செய்யாமல், ஒட்டடை படிந்து பாழடைந்திருந்தது. இந்தத் தகவல் அரசல்புரசலாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, மற்றொரு காங்கிரஸ் புள்ளியான பாலன் உள்ளிட்டவர்களுக்குத் தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கு வந்ததோடு, தண்ணீர் கொண்டுவந்து திருப்பூர் குமரன் சிலையை சோப்பு போட்டு சுத்தம் செய்தனர். அவர்களோடு, பாலனின் மகள் சுரேகாவும் ஆர்வமாக வந்து  குமரன் சிலையைச் சுத்தம்செய்தார். அதைத் தொடர்ந்து, திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்தனர். ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தொடங்கி சாதாரண ஆளும்கட்சித் தொண்டர் வரை யாரும் திருப்பூர் குமரனை கண்டுகொள்ளவில்லை என்பது மிகப் பெரிய வேதனை."
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!