வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (05/10/2017)

கடைசி தொடர்பு:20:13 (05/10/2017)

’’சினிமாவில் டி.ராஜேந்தரின் அம்மா, தங்கை சென்டிமென்ட் எல்லாம் பொய்யா?!’’ கொதிக்கும் பெண்கள்

மாதர்சங்கம்

''தன்னுடைய திரைப்படங்களில் அம்மா - தங்கை சென்டிமென்ட் காட்சிகளை வைத்து உருகி உருகி வசனம் பேசி, கைதட்டல்களை அள்ளியவர், டி.ராஜேந்தர். ஆனால், 'யதார்த்தத்தில், நான் அப்படியல்ல... நானும் ஓர் ஆணாதிக்கவாதிதான்' என்பதை நிரூபிப்பதுபோல இருக்கிறது அவரது நடவடிக்கை'' என்று வெகுண்டெழுகிறார்கள் பெண்ணியவாதிகள்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் வரவேற்றுப் பேசிய நடிகை தன்ஷிகா, விழாவில் கலந்துகொண்ட டி.ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆவேசமான டி.ராஜேந்தர், தன்ஷிகாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. 

இந்நிலையில், தற்போது ஜனநாயக மாதர் சங்கத்தை விமர்சித்துப் பேசியதாக டி.ஆர்மீது மாதர் சங்கத்தினர் கோபமடைந்துள்ளனர்.

''சிம்புதான் சர்ச்சைகளை உருவாக்கி, அதில் தானே மாட்டிக்கொள்கிறார் என்றால், டி.ஆரும் அதே பாணியில் செல்கிறாரோ என்று நினைக்கவைத்துவிட்டார். 'அந்த நிகழ்வு உண்மையல்ல... அந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக டி.ஆர்., திட்டமிட்டுப் பண்ணியது' என்று  இப்போது சொல்லிவருகிறார்கள். அப்படிச் செய்திருந்தாலும் அது தவறுதானே...’’  என்று கேள்வி எழுப்பினர் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  மாநிலத்தலைவரான எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர். 

தொடர்ந்து இதுகுறித்துப் பேசியவர்கள், ''அவர் எப்போதும் அப்படித்தான் பேசுகிறார். சில நாள்களுக்கு முன்பு, ஊடகவியலாளர்களுக்குப் பேட்டி கொடுத்தபோது, பீப் சாங்குக்கு எதிராகக் குரல் கொடுத்த மகளிர் அமைப்பு, அனிதா மரணத்துக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று கேட்டிருக்கிறார். மற்றவர்களைக் குறை கூறிப் பேசுவதற்கு முன், தான் பேசுவது சரியா என்று  சரிபார்த்துக்கொள்வது அவருக்கு நல்லது.

அனிதாவின்  மரணச் செய்தியைக் கேட்டவுடன், எங்கள் அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதியும் மாநிலக்குழு உறுப்பினர்களும் மற்ற நிர்வாகிகளும் அனிதா வீட்டுக்குச் சென்று அஞ்சலிசெலுத்தினர். அதுமட்டுமல்லாமல், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் சேர்ந்து பல மாவட்டங்களில் அஞ்சலிக் கூட்டங்களையும், கண்டனப் இயக்கங்களையும் நடத்தியிருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்களை எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவும் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே, விழுப்புரத்தில் மூன்று மாணவிகளின் மர்ம மரணம் குறித்தும் இதேபோன்ற கேள்வியை ஊடகங்கள் வாயிலாக டி.ராஜேந்தர் முன்வைத்தார். மாணவிகளின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்தியதோடு, கண்டன இயக்கங்களையும் முன்னெடுத்திருந்தோம். அந்தச் செய்திகளும் முகநூலில் பதிவாகியுள்ளன. இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டம் செய்யவில்லை என்று அவரே அனுமானித்துக்கொண்டு, 'சிலம்பரசனுக்கு எதிரான சதி' என்று பிரகடனப்படுத்துகிறார்.

இவரைப்போன்றே வேறுசிலரும்கூட எந்தப் பிரச்னை எழுந்தாலும் 'மாதர்சங்கம் எங்கே' என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அநீதிகளை எங்கள் அமைப்பு தட்டிக்கேட்கும் என்ற அவர்களின் இந்த எதிர்பார்ப்பு, ஒரு விதத்தில் எங்களுக்கான அங்கீகாரம் என்றே கருதுகிறோம்.  ஊடகங்கள் எங்களின் போராட்டங்களைக் காட்டவில்லை என்பது எங்கள் குற்றமல்ல. பெண்களை இழிவுபடுத்தும் சிலம்பரசனின் படுமோசமான பாடலைக் கண்டித்தபோது மட்டும், எங்களின் போராட்டங்களை அடிக்கடி ஊடகம் ஒளிபரப்பியது எங்கள் குற்றமல்ல. எங்கள் சங்கத்தையும், எங்கள் தலைவர்களையும் சிலம்பரசனின் ரசிகர்கள் மிகக்கேவலமான ஆபாச மொழியால் அர்ச்சித்தது குறித்து டி.ராஜேந்தர் மவுனம் சாதித்ததையும் நாங்கள் கவனித்திருந்தோம்.

மாதர்சங்கம்

 எங்களின் நடவடிக்கைகள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் தொடங்கி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முடிந்துவிடுவது கிடையாது. குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்துகொண்டு எங்களின் அரசியலை நாங்கள் நடத்துவது கிடையாது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பிரச்னைகளை எடுப்பதோ அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதோ எங்களின் வழக்கம் அல்ல. அறிக்கைகளோடும், அடுத்தவர்களைக் கேள்வி கேட்பதோடும் நாங்கள் தலையீடுகளை முடித்துக்கொள்வது கிடையாது. 'அதற்கு மாதர் சங்கம் வந்ததா, இதற்கு மாதர் சங்கம் வந்ததா' என்று கேட்பதனாலேயே சிலம்பரசனின் பாடல் வரிகளை நியாயப்படுத்த முடியாது. 'நீங்கள் என்ன போராட்டம் நடத்தினீர்கள் அல்லது பங்கேற்றீர்கள்' என்று நாங்கள் கேட்க ஆரம்பித்தால் என்ன ஆவது? பிரச்னைகள் மலைபோல் கொட்டிக்கிடக்கின்றன. எங்களால் இயன்ற தலையீடுகளை, போராட்டங்களை நாங்கள் நடத்துகிறோம்; உங்களால் இயன்றதை நீங்கள் செய்யுங்கள். சம நீதியையும், சமூகநீதியையும் யார் மீறினாலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிச்சயம் தட்டிக் கேட்கும்.’’ என்றனர்.

 

 

மாதர் சங்கத்தின் மீதான டி.ஆரின் கோபம் எப்போது தணியும் என்று தெரியவில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்