வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (05/10/2017)

கடைசி தொடர்பு:15:08 (09/07/2018)

அரசு அலுவலகத்தில் இருந்த திருட்டு மணல் மாயம்; அதிர்ச்சியில் திருவாடானை மக்கள்

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த மணல்

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த திருட்டு மணல், திருடுபோன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைப் பகுதி, அந்த மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயர்பெற்றது. இதற்குக் காரணம்,  அந்தப் பகுதியில் உள்ள ஆறுகளில், பருவ காலங்களில் ஓடும் தண்ணீர்தான்.  அந்தத் தண்ணீரைக்கொண்டு அங்குள்ள விவசாயிகள் விவசாயம்  செய்துவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக  அந்தப் பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீருக்குப் பதில் மணல் லாரிகளே ஓடிக் கொண்டிருக்கின்றன. தங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பாம்பாற்றில், அரசே மணல் குவாரி அமைக்க வந்தபோது, அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள் மக்கள். ஆனால் இப்போது, திருட்டுத்தனமாக நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸாரால் பிடிக்கப்பட்டு, திருவாடானை  வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த திருட்டு மணலே திருட்டுப் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 9-ம் தேதி, திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த 3 லாரிகளை எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடி போலீஸார் சிறைப்பிடித்தனர். 15 நாள்களுக்குப் பிறகு, திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், லாரியில் உள்ள மணலை திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில்  கொட்டிவிட்டு அபராதத் தொகையைச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாயமான மணல்

இதையடுத்து, திருவாடானை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 3 லாரி மணலும் கொட்டிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், கொட்டிவைக்கப்பட்டிருந்த மணல் போனஇடம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோதும் சரியான பதில் இல்லை. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த திருட்டு மணலே திருடு போயிருப்பது, அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான மணலை அபகரித்துச் சென்றவர்கள்குறித்து உரிய நடவடிக்கை எடுக்க, அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.